
30 ஆண்டுகளாக சத்தமின்றி குழந்தை திருட்டு… கலரை வைத்து விலை சொன்ன செவிலியர்..!
கடந்த 30 ஆண்டுகளாக குழந்தைகளை திருடி செவிலியர் ஒருவர் விற்று வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் திருடு போவது, குழந்தையை விற்பது போன்ற அவலங்கள் அவ்வப்போது நடந்தேறி வருவதும், அவர்களை போலீசார் கைது செய்வதும் வழக்கமாகி விட்டது. ஆனால் இந்த வேலையைக் கடந்த 30 ஆண்டுகளாகத் தங்கு தடையின்றி ஒருவர் செய்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செவிலியராக பணியாற்றி வந்த அமுதா என்பவர் ஆண் குழந்தை 4 லட்சம், பெண் குழந்தை 3 லட்சம் என்ற ரீதியில் குழந்தைகளை விற்று வந்துள்ளார். அதிலும் குறிப்பாக குழந்தையின் நிறம் மற்றும் எடையை பொறுத்தும் விலையை நிர்ணயம் செய்துள்ளார். மேலும் 70 ஆயிரம் கொடுத்தால் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கூட வாங்கி கொடுத்துள்ளார் இந்த பலே கில்லாடி. இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், கடந்த 30 வருடங்களாக எந்த வித தடையும் இன்றி இவர் செயல்பட்டு வந்தது தான் என்கிறார்கள் உள்ளூர் வாசிகள்.
இந்த விவகாரம் குறித்த ஆடியோ ஒன்றும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அமுதா, 30 ஆயிரம் கொடுத்து குழந்தையைப் பதிவு செய்து கொள்ளுங்கள், பின்பு நேரில் வந்து குழந்தையை வாங்கி கொள்ளுங்கள் என்று என்று குழந்தை பேரத்தில் மும்முரமாகப் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக அமுதாவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை விற்பனை செய்யும் இந்த கும்பல் வெளி மாநிலங்களிலிருந்தும் குழந்தைகளைத் திருடி வந்து விற்று வருவது குறிப்பிடத்தக்கது.
