வியாழக்கிழமை, மே 16
Shadow

மோடி நாற்காலி நிலைக்குமா… மாநில கட்சிகளின் கூட்டணி ஆட்சியா… நாளை மாலை தெரிந்து விடும்..!

நாடு முழுவதும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 5 ஆண்டு கால ஆட்சி நிறைவடைவதை முன்னிட்டு 17-வது மக்களவையை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

வேலூர் மக்களவை தொகுதி தவிர நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக 435 தொகுதிகளிலும், காங்கிரஸ் 420 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியது.
பாஜக, காங்கிரஸ் மட்டுமின்றி கம்யூனிஸ்டுகள் மாநில கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 8,039 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல்களில் சுமார் 63 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும், அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

3அடுக்கு பாதுகாப்புடன் சிசிடிவி மூலமாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக நாடு முழுவதும் உள்ள 856 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை வேலூர் தொகுதி தவிர தேர்தல் நடைபெற்ற 38 மக்களவை மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக மொத்தம் 45 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 மக்களவை மற்றும் ஒரு சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 3 மையங்களில் எண்ணப்பட உள்ளன.

காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாக மாலை ஆகும் என கூறப்படுகிறது. இந்த தாமதற்கு காரணம் இந்த முறை வாக்கு எண்ணிக்கையில் இந்திரங்களில் பதிவான வாக்கும், யாருக்கு வாக்களித்தோம் என்ற மிஷினில் விழுந்துள்ள வாக்கு சீட்டுக்களின் 50 சதவீத கணக்கையும் சரி பார்த்த பின்னரே முடிவுகள் அறிவிக்கப்படுமாம்.

அதே நேரம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும் என்று கூறினாலும் அதிக இடங்களில் மாநில கட்சிகள் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன என கூறி இருப்பதால் மத்தியில் ஆட்சி அமைப்பது யார் என்பது குழப்பமாக உள்ளது.

347 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன