
சமந்தா நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
இது கொரியப் படம் ஒன்றின் அதிகாரபூர்வமான ரீமேக் எனத் தெரியவந்துள்ளது.
தென் கொரியாவில் 2014ஆம் ஆண்டு வெளியான படம் மிஸ் கிரானி. வயதான பெண் எதிர்பாராதவிதமாக இளவயது தோற்றத்தை அடைவதை மையமாகக் கொண்டு உருவாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கை நந்தினி ரெட்டி ஓ பேபி என்ற பெயரில் இயக்குகிறார்.

இதில் சமந்தாவுடன் இணைந்து பழம்பெரும் நடிகை லட்சுமி நடிக்கிறார். சமந்தா ஸ்வாதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தெலுங்கு திரையுலகில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்ஷன்ஸ், பியூப்பிள்’ஸ் மீடியா ஃபேக்டரி, குரு பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தை தயாரிக்கின்றன.
போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமந்தா, “திரைப்பட தயாரிப்பில் 55 ஆண்டுகளைக் கடந்துள்ள சுரேஷ் புரோடக்ஷன்ஸின் பயணத்திற்கு வாழ்த்துக்கள்.
அவர்களது அடுத்த படத்தில் நான் பங்கெடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
ஓ பேபி படத்திலிருந்து ஸ்வாதி கதாபாத்திரத்தை உங்களிடம் அறிமுகப்படுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் நிறைவடைந்தது.
தற்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
