
கங்கையை தூய்மைபடுத்த மோடிக்கு கெடுவிதித்த சாதுக்கள் இயக்கம்..!
‘மாத்ரி சதன்‘ என்ற சமூக-ஆன்மிக இயக்கத்தை சேர்ந்த பிரமச்சாரி ஆத்மபோதானந்தா என்ற சாது கங்கை ஆற்றை தூய்மை படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து 194 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார்.
கடந்த மாதம் 4-ந் தேதி, மத்திய மோடி அரசு கண்டிப்பாக தூய்மை படுத்துவோம் என வாக்குறுதி அளித்ததன்பேரில், அந்த சாது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.

இந்நிலையில், அதே இயக்கம் சார்பில் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், “கங்கையை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை ஜூன் 13-ந் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்ற தவறினால், அடுத்த கட்ட போராட்டத்துக்கான திட்டத்தை வகுப்போம்“ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்று ஒரு சில நாட்களில் சாதுக்களின் இந்த மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், கங்கை நதியை தூய்மைப்படுத்த வலியுறுத்தி, இந்த இயக்கம் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு நமாமி கங்கா என்ற திட்டத்தை ஏற்படுத்தி கங்கையை சுத்தப்படுத்த மத்திய அரசு 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. அதற்கு ஒப்புதல் அளித்ததும் மோடிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியும் கங்கை இன்னும் சுத்தமாகவில்லை. அப்படியிருக்க ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்று சாதுக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
