செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

திமுக எம்.பி.க்கள் தமிழ் வாழ்க கோஷம் … வந்தே மாதரம் கோஷம் போட்ட அதிமுக எம்.பி… பதவி ஏற்றதும் பரபரப்பு…!

 

தமிழ் வாழ்க’ என்று கூறி பதவியேற்ற திமுக எம்.பி.க்களுக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் கோஷம்..!

சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் நேற்று பதவி ஏற்றனர்.

313 எம்.பி.க்கள் பதவியேற்ற நிலையில் மீதமுள்ள உறுப்பினர்கள் எம்.பி.க்களாக இன்று பதவி ஏற்றனர்.

புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் தமிழில் பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து சில மாநில எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். அதன்பிறகு தமிழக எம்.பி.க்கள் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

வழக்கமாக எம்.பி.க்கள் பதவி ஏற்கும்போது, ‘உளமாற உறுதி கூறுகிறேன்…’ என்று கூறி முடிப்பார்கள். அதன்பிறகு பாராளுமன்ற பதிவேட்டில் கையெழுத்திட்டு அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுவார்கள்.

ஆனால், தமிழக எம்.பி.க்கள் அனைவரும் இன்று பாராளுமன்றத்தில் பதவி ஏற்று முடித்ததும், தங்களுக்கு பிடித்தமான தலைவர்களின் பெயர்களை சொல்லி வாழ்க என்று குறிப்பிட்டனர்.

தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உறுதிமொழி எடுத்ததும் பெரும்பாலான எம்.பி.க்கள் தமிழ் வாழ்க என்ற கோ‌ஷத்தை எழுப்பினார்கள். சில எம்.பி.க்கள் கலைஞர் புகழ் வாழ்க என்று கூறினார்கள்.

காங்கிரஸ் எம்.பி.க்களும் தி.மு.க. எம்.பி.க்களை போல தமிழ் வாழ்க என்று கூறினார்கள். கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் பதவியேற்றதும் உலக தமிழர்களே ஒன்றுகூடுங்கள் என்று முழக்கமிட்டனர்.

தமிழ்நாட்டு எம்.பி.க்கள் உறுதிமொழி ஏற்ற பிறகு தமிழை வாழ்த்தி பேசியதற்கு வடமாநில எம்.பி.க்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ் வாழ்க என்று தமிழக எம்.பி.க்கள் சொன்னபோதெல்லாம் அவர்கள் பாரத் மாதாகீ ஜே என்று கோ‌ஷமிட்டனர்.

என்றாலும், தமிழக எம்.பி.க்கள் தமிழை வாழ்த்தி குறிப்பிட்டு பேச தவறவில்லை. சில எம்.பி.க்கள் வெல்க தமிழ் என்று கூறிச்சென்றனர்.

அ.தி.மு.க. வின் ஒரே எம்.பி.யான ரவீந்திரநாத் குமார் பதவி ஏற்று முடித்ததும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்க, புரட்சித் தலைவி அம்மா வாழ்க, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என்று குறிப்பிட்டார்.

அப்போது பா.ஜ.க. உறுப்பினர்கள் மேஜையை தட்டி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தூத்துக்குடி தொகுதி தி.மு.க. எம்.பி. கனிமொழியும் தமிழிலேயே பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார். அவர் உறுதி மொழி எடுத்து முடித்ததும் வாழ்க தமிழ், வாழ்க பெரியார் என்று கூறினார்.

1,218 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன