
இடைத்தேர்தலில் உதயநிதி போட்டியிட்டால் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்- திருநாவுக்கரசர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி தொகுதி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும் என கே.என்.நேரு பேசியது அவருடைய சொந்த கருத்து. கருத்தை சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான இடங்கள் பங்கீடு குறித்து கட்சிகளின் தலைமைகள் தான் பேசி முடிவு செய்யும்.
உள்ளாட்சி, சட்டப் பேரவை தேர்தல்களிலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும். ஆனால் தோற்றுவிடுவோம் என்ற பயம் இருப்பதால் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்துமா? என்பது சந்தேகமே. பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றேன் என்று நான் எங்கும் கூறவில்லை.
என்னுடைய வெற்றிக்கு தி.மு.க- காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கு பங்கு உண்டு
நாங்குநேரி தொகுதியில் ஏற்கனவே காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததால், இடைத்தேர்தலிலும் அங்கு காங்கிரஸ் போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம். வேலூர் பாராளுமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் வர வாய்ப்புள்ளது.
இவற்றில் ஒரு வேளை தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால் அவருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும் என்றார்.
