
தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து பிரதமரை காப்பாற்ற போராடும் உண்மையான ஒரு பாதுகாப்பு மெய்க்காப்பாளனின் கதைதான் காப்பான்.
சூர்யா தான் அந்த மெய்காப்பாளன். மோகன்லால் பிரதமர் வேஷத்தில் நடித்திருக்கிறார். தீவிரவாதிகளின் தாக்குதலில் மோகன்லால் கொல்லப்பட அந்த பதவிக்கு அவருடைய மகன் ஆர்யா வருகிறார். அவரையும் கொல்ல தீவிரவாதிகள் முயற்சிக்க அந்த முயற்சியை எப்படி மெய்க்காப்பாளன் சூர்யா காப்பாற்றுகிறார் என்பதே காப்பான்.
கதையில் சீரியசான மிடுக்கான பிரதமராக மோகன்லால் மிக பொருத்தமாக இருக்கிறார்.
அதே நேரம் திடீர் பிரதமரான ஆர்யா வழக்கம் போல விளையாட்டு பிள்ளை போல தான் இருக்கிறார்.
கார்ப்ரேட் முதலாளி கதாபாத்திரம் யாரையோ நினைவு படுத்துகிறது.
கதாநாயகி சாயிஷா அழகு பொம்மை. மற்றபடி அவருக்கு பெரிதாக டிவிஸ்ட் எதுவும் இல்லை. கிளைமாக்சில் வரும் டிவிஸ்ட் முன்பே கணிக்க முடிகிறது.
சூர்யா… மிடுக்கான மெய்க்காப்பாளர் கதாபாத்திரம் ஏற்றதும் அவரின் உடல்மொழி அப்படியே பேசுகிறது. அதற்கு நேர்மாறாக கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயியாக மாறுகின்ற அந்த தோற்றமும் அசத்துகிறது.
சூர்யா ரொம்பவே உழைத்திருக்கிறார். அதே நேரம் அந்த ரயில் மீது பாம் வைக்கும் காட்சியும் அதை தொடர்ந்து வரும் சண்டை காட்சியும் சூர்யாவின் உழைப்பு தெரிந்தாலும் அதை நம்பமுடியாமல் போகிறது.
சூர்யா கதை கேட்கும் போக்கில் மாற்றம் இருந்தால் நன்மை தரும்.
இயக்குனர் கே.வி.ஆனந்த் திரைக்கதையில் இன்னும் சிரத்தை எடுத்திருக்க வேண்டும். காட்சிகளில் கதாபத்திரத்தில் டீட்டெய்லிங் காட்ட மெனக்கெட்ட அளவில் கொஞ்சமாவது கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
வசனங்கள் பல இடங்களில் நிஜத்தை பேசுகிறது. சில இடங்களில் கைத்தட்டல் பெறுகிறது.
நாட்டின் தீவிரவாத அச்சுறுத்தல், பிரதமர் பாதுகாப்பு என கதை தொடங்கி இயற்கை விவசாயம், பயோவார், கார்பரேட் முதலாளிகள் ஆதிக்கம் என பயணித்து கடைசியில் தஞ்சை டெல்டாவில் முடிகின்றது.
பட்டுக்கோட்டை பிரபாகர் இந்த கதையில் பெருசாக எதையும் புகுத்தாமல் கிடைத்த பெரிய வாய்ப்பை மொத்தமாக வீணடித்து இருக்கிறார். ஆனால் பட ரிலீசுக்கு முன்பு அவர் பேசிய பேச்சை கதையில் காட்டி இருக்கலாம்.
ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். அதிலும் “அவிச்ச முட்டை ஆம்லேட் ஆகாது” பாடலில் அத்தனை கலகலப்பு.
சமுத்திரக்கனி நேர்மையான அதிகாரியாக வந்தாலும் அவர் பேசும் இரட்டை அர்த்த வசனங்களை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.
அதே போல பிரதமர் கதாபாத்திரத்திற்கான மரியாதை பல இடங்களில் காற்றில் பறக்கும் காட்சிகளையும், சூர்யா ஒரு வேகத்தில் பிரதமரான ஆர்யாவை ஓங்கி அறையும் காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம். என்னதான் சூர்யா ஹீரோவாக இருந்தாலும் ஆர்யா பிரதமர் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரம் மரியாதை பெற வேண்டும்.
மிகப்பெரிய பட நிறுவனமாக லைகா தயாரிப்பில் உருவான காப்பான் சூர்யாவுக்கும், இயக்குனர் கே.வி.ஆனந்துக்கும் கண்டிப்பாக புதிய பரிணாமத்தை காட்டி இருக்கும்.
– கோடங்கி
