
தீபாவளி சிறப்பு காட்சிக்கு வசூலித்த பணத்தை திரும்பக் கொடுங்கள்! – அமைச்சர் கடம்பூர் ராஜு
“பிகில் படம் மட்டுமல்ல எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்க வில்லை, தீபாவளி சிறப்புக் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்து உரியவரிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியுள்ளோம்” என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரத்தில் உமறுப்புலவர் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மலர் தூவி மரியாதை செய்தார்.
இதை தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில் “பிகில் படம் மட்டுமல்ல எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை,ஊடகங்கள் பிகிலை மட்டும் முன்னிலைப் படுத்துகின்றனர்.
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு மட்டும் விடுமுறையை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் அவற்றை தவறாக பயன்படுத்தி அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது ஆகவேதான் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை என்றும், ரசிகர்களும் முதல் காட்சி பார்க்க 2,000 ரூபாய் வரை செலவழிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்தால் அதிக கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் எப்படி வருகிறார்கள் என்று பார்த்து அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை என்பதால் ஏற்கனவே சிறப்பு காட்சிகளுக்கு பணம் வசூலிக்கப்பட்டு இருந்தால் அவற்றை மீண்டும் உரியவர்களுக்கு வழங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம்.
அதிக கட்டணம் வசூலிக்க மாட்டோமென்று திரையரங்கு உரிமையாளர்கள் கருத்து கூறியுள்ளனர் அவர்களின் கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது குறித்து முடிவு செய்யப்படவில்லை அவ்வாறு சிறப்பு காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கினாலும், அரசு விதிகளுக்கு உட்பட்டால், நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அரசு அனுமதி வழங்கும் ” என்றார்.
