
தமிழ் சினிமாவை டிரண்டிங் என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக அழிக்கும் கேப்மாரி புரொமோட்டர்கள்..!
தமிழ் சினிமா 100 ஆண்டுகளை தாண்டி தனது சாதனை பயணத்தை தொடர்கிறது.
தொழில்நுட்பம் மாற மாற திரைத்துறையில் பல மாற்றங்கள் நடைபெறுவது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக டிரண்டிங் என்ற வார்த்தையை பயன்படுத்தி தயாரிப்பாளர்களை ஏமாற்றி கொள்ளை அடிக்கும் கூட்டம் பட புரொமோஷன் என்ற பெயரில் உலா வருகிறார்கள்.
முன்பெல்லாம் ஒரு படத்தை பற்றிய செய்திகளை முழுமையாக கொடுத்த பத்திரிக்கைகளுக்கு இணையாக இணைய தளங்கள் அதிகரித்தது.
இந்த இணைய தளங்கள் மூலம் உலகம் முழுதும் பட செய்திகள் ஒரு நொடியில் பகிரப்பட்டு அது தயாரிப்பாளர்களுக்கு வியாபார ரீதியாக பலன் தந்தது.
அதன் பின் இப்போது 280 எழுத்துக்களில் படத்தை டிரண்டிங் செய்கிறோம் அதுவும் இந்திய அளவில், உலக அளவில் என ஒரு சில கேப்மாரி புரொமோட்டர்கள் தயாரிப்பாளர்களை வசியப்படுத்துவதால் அவர்களும் அந்த நேரத்தில் பட தகவல் டிரண்டிங் ஆனால் பல கோடி கல்லா கட்டி விடலாம் என ATC, CTC, HTC, UTC போன்ற கேப்மாரி 420 விளம்பர ஏஜெண்ட்டுகளை நம்பி பணத்தை லட்சக்கணக்கில் கொடுத்து ஏமாந்து போகிறார்கள்.
இது போன்ற கேப்மாரி புரொமோட்டர்கள் இந்த ஆண்டில் மட்டும் வெளியான படங்களில் சுமார் 100 படங்களுக்கு டிரண்டிங் புரொமோட் செய்கிறோம் என தயாரிப்பாளர்களிடம் வாங்கிய தொகை மட்டும் சுமார் 5 கோடியை தாண்டும்.
அத்தனை கோடிகள் செலவழித்து டிரண்டிங் என்ற பெயரில் இது போன்ற கேப்மாரி நிறுவனங்களால் ஒரு படமும் லாபம் அடைய வில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இதில் CTC என்று அழைக்கப்படும் நிறுவனத்தின் மீது முன்பே ஒரு பட விளம்பரத்திற்காக 12 லட்சம் பேசி அதில் அட்வான்ஸ் தொகையாக 6 லட்சத்தை வாங்கிக் கொண்டு யாருக்கும் தராமல் மொத்தமாக அல்வா கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடதக்கது.
இவர்களைப் போல ஒரு பெண்மணி நடத்தும் புரொமோஷன் நிறுவனத்தின் மீது பல லட்சத்திற்கு மோசடி புகார் போலீஸ் நிலையம்வரை போனது.
இது போன்ற நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய ஒரு சிலரை கையில் வைத்து கொண்டு அதில் மட்டும் தகவலை பதிவு செய்து தயாரிப்பாளருக்கு காட்டி மோசடியில் ஈடுபடுகிறது.
இது எப்படின்னா… பணம் கொடுத்த தயாரிப்பாளர்கள் காலையில எழுந்து வீட்ட விட்டு வெளிய வந்தா அவங்க கண்ணுல படுற மாதிரி ஒரு பத்து போஸ்டர் வீட்ட சுத்தி ஒட்டுறது… அப்புறம் அவர் ரெகுலரா போற வழியில கண்ணுல படுற மாதிரி சில போஸ்டர்… கடைசியா ஆபீஸ் வாசல்ல சிலது… இப்ப தயாரிப்பாளருக்கு திரும்புன பக்கமெல்லாம் படத்தோட புரொமோஷன் இருப்பது போல தெரியும்.
படத்தை பலகோடி போட்டு எடுத்து ரிலீஸ் பன்ற நேரத்துல இதை சரியாகவனிக்க முடியாம போகும் சூழலை இதுபோன்ற கேப்மாரி புரொமோட்டர்கள் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.
சமீபத்தில் பல மொழிகளில் ரிலீஸ் ஆன சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் ஆன்லைன் புரொமோஷன் பணியையும் இந்த CTC நிறுவனம் தான் பல லட்சம் பெற்றுக் கொண்டு பெயரளவில் விளம்பரம் செய்தார்கள். ஆனால் படம் புதுசாகவும் பிரமாண்டமாகவும் இருந்ததால் ஓரளவுக்கு வசூல் ஈட்ட இதற்கு காரணமே எங்கள் புரொமோஷன் தான் என்று இந்த கம்பேனி கதை விட்டது தனிக்கதை. அந்த பட நிறுவனமும் “ஆத்துல போன தண்ணி கூடுச்சா குறைஞ்சிச்சான்னு” கவனிக்காம விட்டது இவங்களுக்கு இன்னும் வசதியா போச்சி.
இப்போதும் சுந்தர்.சி நடிப்பில் வெளியான இருட்டு படத்தின் புரொமோஷன் போஸ்டர்களாக பல இடங்களில் கண்களில் படுகிறது. அதில் இருக்கும் எல்லாரும் இஷ்டத்துக்கு படத்துக்கு மார்க் அள்ளி வீசியிருக்கிறார்கள். இந்த மார்க் வாங்கிய படம் தியேட்டர்களில் எண்ண முடியாத வசூலை அள்ளி குவிக்க வேண்டும்.
ஆனால் ரிலீஸ் ஆன அடுத்த நாளே பல தியேட்டர்கள் காத்து வாங்குகிறது.
இந்த இருட்டு படத்தையும் இதே CTC நிறுவனம் தான் விளம்பரம் செய்தது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்த மாயாஜால வித்தைக்கார கேப்மாரி புரொமோட்டர்கள் வசம் இருந்து தமிழ் சினிமாவும், தயாரிப்பாளர்களும் எப்போது மீண்டு வருவார்கள்… காத்திருப்போம்.
அடுத்த பதிவில் “கேப்மாரி” பட புரொமோஷன் செய்ய அட்வான்ஸ் தொகை 6 லட்சம் வாங்கி சுருட்டிய நிறுவனம் குறித்த தகவல் ஆதாரத்தோடு…
– கோடங்கி
