
சரித்திர பின்னணியில் எடுக்கப்பட்டு மெகா ஹிட் ஆன படம் பாகுபலி. அதன் வெற்றியால் இந்தியா முழுவதும் சரித்திர பின்னணி படங்களுக்கு ஏக மவுசு ஏற்பட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாகத்தான் சுந்தர்.சி.இயக்கத்தில் தேனான்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘சங்கமித்ரா’ என்ற பட அறிவிப்பு வெளியானது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் இதற்கான ஆரம்ப விழாவை நடத்தினார்கள். இதில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு, பட ஆரம்ப விழா நடந்த கேன்ஸ்வரை ஸ்ருதியும் சென்றிருந்தார்.

இதற்கிடையில் திடீரென சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதி விலகிவிட்டார் என கூறப்பட்டது. பட வேலைகள் எதுவும் தொடங்காதபோது இதுபோன்ற செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது என்பதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வராததால் திரையுலகினரும் அவரவர் வேலையை பார்த்தனர்.
சமீபத்தில் சென்னை வந்திருந்த ஸ்ருதிஹசன் பலமுறை செய்தியாளர்களை சந்தித்தபோதும் ‘சங்கமித்ரா பற்றி பேச விரும்பவில்லை’ என்று கூறிவிட்டார்.
இந்தநிலையில் வழக்கம்போல சங்கமித்ரா இயக்குனர் சுந்தர்.சி.யின் மனைவியான நடிகை குஷ்பு சமூக வலைதளத்தில் ஒரு கருத்தை பதிவு செய்தார்.

இது சும்மா கிடந்த சங்கை எடுத்து ஊதிவிட்டதுபோல ஆகியிருக்கிறது… அந்த செய்தியில் ‘இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு மிக பிரமாண்ட பொருள் செலவில் இந்த படம் தயாரிக்கப்பட உள்ளது. சரியான திட்டமிடுதல் இல்லாமல் படத்தை தொடங்க முடியா. கதை தயாராக இல்லை என்று தேவையற்ற கருத்துக்கள் பரபரப்பப்படுகிறது. ஆனால் 2 ஆண்டுகளாக இந்த பட வேலைகள் நடந்து வருகிறது. 30 சதவீதம் மட்டுமே இதுபோன்ற பிரமாண்ட படங்களுக்கு படப்பிடிப்பு வேலைகள் இருக்கும். தொழில் பண்பு இல்லாதவர்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகிறது.

உங்களுடைய குறைகளுக்காக மற்றவர்களை குறை சொல்லக் கூடாது. சீ… சீ… இந்த பழம் புளிக்கும் என்பதுபோல திராட்சை புளித்து விட்டதா… பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்தவரிடம் இருந்து இன்னும் கொஞ்சம் தொழில்பண்பை எதிர்பார்க்கிறேன்’ என்று அந்த செய்தியில் கூறியிருக்கிறார்.

குஷ்பு ‘உங்களுடைய’ என்று குறிப்பிடும் நபர் ஸ்ருதிஹாசன் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
ஏற்கனவே, குஷ்புவுக்கும் சமூகவலைதள பிரியர்களுக்கும் ஏழாம்பொருத்தம்… இப்ப சும்மா கிடந்ததை எடுத்து
ஊதி விட்டிருக்காங்க… பாப்போம் சங்கு சத்தம் காதை கிழிக்குமா… கால்ஷீட்ட குடுக்குமான்னு..!
கோடங்கி
