வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

நான் அவளை சந்தித்த போது கோடங்கி விமர்சனம்

 

 

தமிழ் சினிமாவில் இயல்பான கதைகளை படமாக பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. அதிலும் வலியோடு நிஜத்தை சொல்லும் படங்கள் வருவது நின்றே விட்டது என்றே சொல்லலாம்.

ஆனால் அத்திப் பூத்தார் போல 96 படம் வந்து மெகா ஹிட் ஆனது. அப்படி ஒரு ஹிட் வரிசையில் சேரும் கதை கொண்ட படம்தான் நான் அவளை சந்தித்த போது.

எல்.ஜி.ரவிசந்தர் இயக்கியுள்ள “நான் அவளை சந்தித்த போது” படமும் 96ல் நடந்த ஒரு உண்மையான கதை என சொல்லும் போதே படம் பார்க்கத் தொடங்கிய எல்லாரும் கண்டிப்பாக நிமிர்ந்து உட்காருவார்கள்.

இயக்குனர் ஆன பிறகுதான் கல்யாணம் என வைராக்கியத்தோடு இருக்கும் ஹீரோ வழி தெரியாமல் தவிக்கும் ஹீரோயினை சொந்த ஊருக்கு அழைத்து செல்கிறார்.
அங்கே ஹீரோவை தவறாக புரிந்து கொள்ளும் ஹீரோயின் வீட்டில் திடீர் கல்யாணம் செய்து வைக்கிறார்கள்.

அதன் பின் ஹீரோவின் இயக்குனர் கனவு என்ன ஆனது என்பதை வலியோடு சொல்லி படம் பார்க்கிற நம்மையும் இயக்குனர் எல்.ஜி.ஆர் பதற வைக்கிறார்.

ஹீரோயின் சாந்தினி அதிகம் பேசாமல் கண்களால் பேசி காட்சிகளில் இயலாமையை காட்டி பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார்.

சந்தோஷ் இயக்குனர் ஆக வாய்ப்பு தேடி அலையும் போதும், திடீர் கல்யாணத்தை மறைத்து தன் குழந்தையையே யாருடைய குழந்தை போல காட்டும் இடங்களிலும் சோகத்தை காட்டி நம்மையும் அழ வைக்கிறார்.

சந்தோஷின் நண்பர்களாக வரும் சாம்ஸ், கோவிந்த மூர்த்தி கதாபாத்திரங்கள் உதவி இயக்குநர்களின் போராட்ட வாழ்க்கையை கண் முன் நிறுத்துகிறது.

சாந்தினியின் அப்பா ஜி.எம்.குமார், அம்மா சுஜாதா, டைரக்டர் டிபி. கஜேந்திரன் ஆகிய கதாபாத்திரங்கள் தங்கள் பங்கை மிகச் சரியாக சொல்லி இருக்கிறார்கள்.

கதை நடைபெறும் 96-ம் ஆண்டைத் திரையில் கொண்டு வந்திருப்பதில் கலை இயக்குநரின் தன் பணியை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.

ஆர்.எஸ்.செல்வாவின் ஒளிப்பதிவும் 96ம் ஆண்டுக்கே நம்மை அழைத்துச் செல்கிறது. ஹித்தேஷ் முருகவேலின் இசை பரவாயில்லை ரகம்.

படத்தின் கிளைமாக்ஸ் இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத அழுத்தத்தை கொடுக்கிறது.

சரியாக சொல்வதென்றால் திரையரங்குகள் கிடைத்து மக்கள் பார்வைக்கு நான் அவளை சந்தித்தபோது சென்றால் நிச்சய வெற்றிதான்… ஆண்டு கடைசியில் வந்த யதார்த்தமான நல்ல படம் என்ற பெயர் நிச்சயம்..!

– கோடங்கி

720 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன