வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் இடமாற்றம்! காங்.,கண்டனம்

 

 

டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் இடமாற்றம்! காங்.,கண்டனம்

டெல்லி கலவரம் தொடர்பான வழக்கு விசாரணை, டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. நீதிபதி எஸ்.முரளிதர் தலைமையிலான அமர்வு இதை விசாரித்து வந்தது.

நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டெல்லி போலீஸ் மீது நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். வெறுப்புணர்வை தூண்டும்வகையில் பேசியதாக கூறப்படும் மத்திய மந்திரி அனுராக் தாக்குர், பா.ஜனதா தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்? என்று அவர்கள் கேட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அதே நாள் மாலையில், நீதிபதி முரளிதர் பணியிட மாற்ற உத்தரவு வெளியானது. அவர் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து ஜனாதிபதி இந்த முடிவை எடுத்திருப்பதாக மத்திய சட்ட அமைச்சகத்தின் உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

டெல்லி கலவர வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டது, பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

குறிப்பாக, காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “இந்த நேரத்தில் பணியிட மாற்றம் செய்யப்படாத துணிச்சலான நீதிபதி லோயாவை நினைவு கூறுகிறேன்” என்று கூறியுள்ளார்.

பா.ஜனதா தலைவராக இருந்த அமித்ஷா மீதான சொராபுதின் ஷேக் என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா, கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி நாக்பூரில் மாரடைப்பால் காலமானார். அதை நினைவுகூர்ந்து, ராகுல் காந்தி இக்கருத்தை தெரிவித்தார்.

349 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன