வியாழக்கிழமை, மே 16
Shadow

திரெளபதி கோடங்கி விமர்சனம்

 

திரெளபதி கோடங்கி விமர்சனம்

தமிழ் சினிமாவில் சாதி அடையாளங்களோடு வரும் படங்கள் எப்போதாவதுதான் சர்ச்சைகளை ஏற்படுத்தும். அப்படியே சர்ச்சை எழுந்தாலும் தனிப்பட்ட தாக்குதல் வசனங்கள் எதுவும் பெரும்பாலும் இருப்பதில்லை.

ஆனால் மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் – ஷீலா நடித்துள்ள திரெளபதி படம் முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்திப் பிடித்தும் இன்னொரு சமூகத்தை தாக்கியும் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது.

வட சென்னையில் உள்ள ஒரு பதிவு அலுவலகத்தில் மோசடியாக நடைபெற்ற பல ஆயிரம் போலி பதிவு திருமணங்கள் செல்லாது என கோர்ட் உத்தரவு பிறப்பித்த ஆதாரத்தோடு சொல்லுகிறார் இயக்குனர் மோகன்.

மனைவி, மாமனார், மனைவியின் தங்கையை கவுரவ கொலை செய்ததாக சிறையில் அடைக்கப்பட்ட ரிச்சர்ட் ஜாமீனில் வெளியே வருகிறார்.

மனைவியையும், அவரது தங்கையையும் கொன்றது யார் என கண்டுபிடித்து அவர்களை ஒவ்வொருவராக திட்டம் போட்டு கொலை செய்கிறார். அப்படி செய்கின்ற கொலைகளை வீடியோ எடுத்து போலீசுக்கு அனுப்பி வைக்கிறார். போலீசார் கொலையாளியை தேடுகிறார்கள். ரிச்சர்ட் சிக்கினாரா… அவரது மனைவி திரெளபதி உண்மையில் கொலை செய்யப்பட்டாரா என்பதுதான் கிளைமாக்ஸ்.

திரெளபதியாக ஷீலா… செம மாஸ் ஆக பிரேம் பை பிரேம் மிடுக்காக இருக்கிறார். துணிச்சலான கிராமத்து தவறுகளை தட்டிக்கேட்கிற கேரக்டருக்கு ஷீலா மிகப் பொறுந்துகிறார். காட்டன் சேலையில் ஷீலாவின் கதாப்பாத்திரம் மிக வலிமை பெறுகிறது.

சாதிய அடையாளம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் திரெளபதியை எல்லாரும் கொண்டாடி இருப்பார்கள்.

சிலம்பு வாத்தியாராகவரும் ரிச்சர்ட் தான் திரெளபதியின் கணவர். சிலம்பு வாத்தியாராக வரும் காட்சிகளிலும் சரி, தன் மீது கொலைப் பழி சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பியவர்களை தேடிப்பிடித்து கொல்லும் போதும் ரிச்சர்ட் வித்தியாசம் காட்டுகிறார்.

அரசாங்க பதிவாளர் முன்பு நடந்ததாக காண்பிக்கப்படும் திருமண சான்றிதழ்கள் பலதும் போலி என்று சொல்லும் விவகாரம் அதிர்ச்சி ரகம்.

அதிலும் இத்தகைய கேவலமான வேலையை ஒரு குறிப்பிட்ட சாதியினர் செய்வதாக சொல்வது அதைவிட அதிர்ச்சி ரகம்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்தி பிடித்து மாற்று சமூகத்தை மிக கேவலமாக காட்டும் காட்சிகளை அனுமதித்த சென்சார் அங்கே பேசப்படும் வசனங்களை மட்டும் மியூட் செய்திருக்கிறது சென்சார். அப்படி இருந்தும் அந்த வசனங்கள் என்ன என்பதை ரசிகர்கள் யூகிக்க முடியும் என்பதால் சர்ச்சைக்கு சென்சார் போர்டும் துணை போகிறதோ என்றே தோன்றுகிறது.

வக்கீலாக வரும் கருணாஸ் முன் வைக்கும் வாதங்கள் அனைத்தும் ஏற்க கூடியதுதான் என்றாலும் சாதி அடையாளத்தை கொஞ்சம் குறைத்து காட்சிப்படுத்தி இருந்தால் திரெளபதி சபதம் உலகம் அறிந்திருக்கும். என்ன நம்ப சாதிய தூக்கி பிடித்த படம்னு குறிப்பிட்ட சமூகத்தினர் அதிலும் பெண்களை பெற்ற பலரும் தூக்கிப்பிடிப்பார்கள்.

திரெளபதி சினிமா ஒரு பக்கம் பார்த்து கொண்டிருக்கும் போதே அதே பெயரில் ஒரு ஆவண பட ஷூட்டிங்கும் கதையில் ஆங்காங்கே வந்து போவது டாக்குமெண்டரி அனுபவத்தை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில் எல்லா தரப்பு மக்களுக்கும் குறிப்பாக பெண்களை பெற்ற எல்லா குடும்பத்துக்குமான கதையை நேரடி சாதிப்படமாக மிக அழுத்தமாக பதிவு செய்ததால் ஒரு வட்டத்துக்குள் அடைந்து விட்டது திரெளபதி. சாதி அடையாளம் நேரடியாக இல்லாமல் இலைமறையாக இருந்திருந்தால் பாராட்டு கூடியிருக்கும்.

– கோடங்கி

937 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன