
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மாலை தலைமைச் செயலகத்தில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அரசு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் க.சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு பேரிடராக அறிவிக்கை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக அம்மாவின் அரசு, “வருமுன் காப்போம்” என்ற முதுமொழிக்கு ஏற்ப, எடுத்துள்ள பல்வேறு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் கீழ்க்காணும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
• தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாட்டிலிருந்து பயணிகள் வருகின்றனர். சில நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டு பயணிகளின் வருகையை, மத்திய அரசு தடை செய்துள்ளது. எனினும், அந்நாடுகளிலிருந்து இந்தியர்கள் இங்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால், தேவைக்கேற்ப அவர்களை உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின் படி, 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான வசதிகளை இயன்றவரை அந்தந்த விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்த வேண்டும்.
• அதே போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், உள்நாட்டுப் பயணிகளையும் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தி, சோதனை செய்திட இந்திய விமான நிலைய ஆணைய இயக்குநரும், பொது சுகாரதாரத் துறை இயக்குநரும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
• அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ் நோய் நமது மாநிலத்தில் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, உடனடியாக எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு சோதனை சாவடிகளில், நோய் கண்காணிப்புப் பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த்துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதை உடனடியாக நடைமுறைப்படுத்திட வருவாய் நிர்வாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
• தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு தனியார் பேருந்துகள் வாயிலாக லட்சக்கணக்கானவர்கள் பயணிப்பதை கருத்தில் கொண்டு, அண்டை மாநில எல்லையை ஒட்டி உள்ள சுங்கச் சாவடி அருகிலேயே பயணிகளின் உடல்நிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யத் தேவையான கட்டமைப்புகளை சுகாதாரத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் ஏற்படுத்த வேண்டும்.
• தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில், ரயில்வே, மாநகரப் பேருந்துகள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், பொதுக் கழிவறைகள் போன்ற இடங்களில் பொது சுகாதாரத் துறையினர், போக்குவரத்துத் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து பேருந்துகளையும், மெட்ரோ ரயில்களையும், தினந்தோறும் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்திடவும், கூடுதல் சுகாதார நடவடிக்கைகளையும், கோரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
• ரயில்களின் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து நம் மாநிலத்திற்கும், நம் மாநிலத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணிப்பதைக் கருத்தில் கொண்டு, அனைத்து ரயில் நிலையங்களிலும், தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகளின் உடல் வெப்ப நிலையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும், ரயில் பெட்டிகளையும் தொடர்ந்து கிருமிநாசினி மூலம் தினந்தோறும் சுத்தம் செய்யுமாறு தென்னக ரயில்வேயின் பொது மேலாளருக்கு அறிவுறுத்தப்படுகிறது. (இது குறித்து, முதலமைச்சரிடமிருந்து மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது).
• மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
• ஒருங்கிணைந்த குளிர்சாதனை வசதி உள்ள இடங்களில் அவற்றை வாரம் ஒருமுறையாவது கிருமிநாசினி கொண்டு முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும்.
• தலைமைச் செயலகத்தில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், சட்டமன்ற நடவடிக்கைகளைப் பார்வையிட வரும் பொது மக்களை அனுமதிக்க வேண்டாம் என சட்டப் பேரவைத் தலைவருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சட்டமன்றத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என சட்டப் பேரவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். எனவே, தலைமைச் செயலகத்திற்கு வருவதை பொது மக்கள் தவிர்க்கவும்.
• மாநிலத்தில் செயல்படும் அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் 31.3.2020 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் (10 முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் கல்லூரித் தேர்வுகள் – செய்முறைத் தேர்வுகள் உட்பட) மற்றும் நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். இத்தேர்வுகள் முடிவடையும் வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு குறிப்பாக, வழிபாட்டுத் தலங்கள், கடற்கரை, வணிக மையங்கள், திருமணங்கள் மற்றும் இதர சமூக விழாக்கள், விருந்துகள் ஆகியவற்றை தவிர்க்குமாறும், தனி மனித சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
• பொது மக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தினை பேணவும், குறிப்பாக வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும்,
• கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தைத் தொட வேண்டாம் எனவும்,
• பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின்போது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், வீட்டிற்குள் நுழைந்தவுடனும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும்,
• அனைத்து அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு செல்பவர்கள் பாதுகாப்பு கருதி, தங்கள் கைகளை உரிய கிருமிநாசினியைக் கொண்டு தூய்மைபடுத்திக் கொண்ட பின் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
• சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் அலுவலகம் செல்வதை தவிர்க்கவும், கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி உரிய சோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
• நோய்க்கான அறிகுறி உள்ள பொது மக்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.• கொரோனா வைரஸ் சம்பந்தமாக தெரிந்து கொள்ள சுகாதாரத் துறையின் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை இயக்கப்படுகிறது. இதன் எண்கள் 104, 044-29510400, 044-29510500, 9444340496 மற்றும் 8754448477.
மேற்சொன்ன அனைத்து உத்தரவுகளும் 17.3.2020 முதல் நடைமுறைக்கு வரும்.கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கான முயற்சிகளை ஒவ்வொரு தனி மனிதனும் சுயமாக உணர்ந்து, முழுமையாக மேற்கொண்டு, தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
