
திருப்பூர் போலீசார் வெளியிட்டு வைரல் ஆன டிரோன் கேமரா வீடியோ நிஜமா?
கொரானா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. வாகனங்கள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
கொரானா விழிப்புணர்வு, ஊரடங்கு மீறுபவர்களை பிடித்து தண்டிக்கும் காட்சிகள் என ஒரு நாளைக்கு குறைந்தது நூற்றுக்கணக்கான வீடியோக்கள் வாட்ஸ் அப் மூலம் வலம் வருகின்றன.
அதில் சில வைரல் வீடியோவாக ஆவதுண்டு. அப்படி திருப்பூர் காவல்துறை கழுகு பார்வை என்று சொல்லப்படும் டிரோன் காமிரா மூலமாக நகரை கண்காணிக்கும் போது பொட்டல் வெளியில் கேரம் விளையாட்டு ஆடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள் டிரோன் கேமராவை பார்த்து பதறி சிதறி ஓடுவார்கள். அதில் ஒருவர் அந்த கேரம் போர்டை தலையில் தூக்கி சுமந்து கொண்டு ஓடுவார். இரண்டு பேர் அங்கே நிறுத்தப்பட்டு இருந்த டூ வீலரை எடுத்து கொண்டு வேகமாக செல்வார்கள்.
இவர்களை வானத்தில் பறந்தபடி டிரோன் கேமரா துரத்தும்.

கேரம் போர்டு தூக்கிக் கொண்டு ஓடுபவர் ஒரு கட்டத்தில் அமர்ந்து சுற்றிலும் பார்ப்பார். கேமரா அவர் அருகே இறங்கி அவர் முகத்தை படம் பிடிக்க முயற்சிக்கும். அந்த வாலிபரும் கேரம் போர்டை முகத்துக்கு நேராக திருப்பி கேமராவில் தன் முகம் சிக்காதபடிக்கு மறைப்பார்.
ஒரு கட்டத்தில் கேரம் போர்டை கீழே போட்டுவிட்டு ஊருக்குள் ஓடுவார்.
இந்த காட்சிகளுக்கு நகைச்சுவையாக பின்னணி இசை அமைத்து இந்த வீடியோ வெளியானது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் இது நிஜமான வீடியோவா அல்லது மக்களை எச்சரிக்கை செய்ய போலீஸ் எடுத்த வீடியோவா என்ற விவாதத்தை தொடங்கினார்கள்.
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. முதலில் வரும் காட்சியில் அந்த மரமும் அதை சுற்றி நிழலும் அந்த நிழலில் கும்பலாக கேரம் விளையாடும் நபர்களும், அதே மர நிழலில் ஒரு டூ வீலரும் நின்றிருக்கும்.
டிரோன் கேமரா வானில் பறந்து வரும் இரண்டாவது காட்சியில் அந்த சத்தம் கேட்டு கேரம் விளையாடிக் கொண்டிருந்த அனைவரும் சிதறி ஓடுவார்கள்.
அப்படி சிதறி ஓடுகின்றவர்களில் ஒருவர் திரும்பி வந்து கேரம் போர்டை தூக்கிக் கொண்டு ஓடுவார்… 2 பேர் டூவிலரை எடுத்து போவார்கள். அப்போது அந்த டூ வீலர் நல்ல வெயிலில் நின்று கொண்டிருக்கும்.
எது எப்படியோ பல விழிப்புணர்வு எச்சரிக்கை வீடியோவை போலீசார் வெளியிட்டாலும் இந்த வீடியோ வைரல் ஆன அளவிற்கு வேறு எந்த வீடியோவும் வைரல் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
