
தமிழ் சினிமாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் இடமாக இருந்த முதலாளிகள் அமைப்பு… அதாங்க தயாரிப்பாளர் சங்கம் கடந்த சில ஆண்டுகளாக மேய்ப்பன் இல்லாத ஆட்டுக் கிடையாக மாறியதால்… சில தயாரிப்பாளர்களைத் தவிர பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பெரும் சிரமத்தில் இருக்கிறார்கள்.
முன்பெல்லாம் பட ரிலீஸ் சிக்கல் என்றாலும், ஷூட்டிங் சிக்கல் என்றாலும், நடிகர்கள் பிரச்சினை என்றாலும் என சினிமா துறையில் எந்த சிக்கல் இருந்தாலும் அதை தீர்த்து வைக்கும் இடமாக இருந்த தயாரிப்பாளர் சங்கம் ஏன் இந்த நிலைக்கு போனது.
சமீப காலத்தில் பெரும் முதலீட்டில் எடுத்த படங்களை கூட ரிலீஸ் செய்ய முடியாதபடி தடை அறிவித்த விஷயங்கள் நடக்காமல் இல்லை.
இன்றைக்கு பேசி தீர்க்க வேண்டிய விஷயங்களை நீதிமன்றம் வரை கொண்டு சென்று திரையுலகத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருகின்றனர்.
இதற்கு முழு காரணம் திரைத்துறையை தலையாக இருந்து நிர்வகிக்க வேண்டிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் செயல் படாமல் முடங்கி இருந்ததுதான்.
முன்பு தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. இந்த சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்த போது அது திரைத்துறையின் பொற்காலம் என்று கூறுவார்கள்.

அதன்பின் தயாரிப்பாளர் ராம நாராயணன் தலைமையில் சங்கம் செயல்பட்ட போது திரைத்துறையில் எந்த அமைப்பில் பிரச்சினை என்றாலும் அதை தீர்த்து வைக்கும் மையப்புள்ளியாக தயாரிப்பாளர் சங்கம் தான் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதோடு கூடுதலாக ராம நாராயணன் தலைவராக இருக்கும் போது அரசின் அனைத்து சலுகைகளும் , உதவிகளும் பெரும் சிரமம் இல்லாமல் சங்க உறுப்பினர்களுக்கு கிடைத்தது. காரணம் அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன் ராம நாராயணன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்ததால் திரைத்துறைக்கு கேட்டதெல்லாம் கிடைத்தது. குறிப்பாக சிறு முதலீட்டு திரைப்படங்கள் சிரமம் இன்றி ரிலீஸ் ஆனது இவரது பீரியடில்தான் என்பதால் இன்றைக்கும் சிறுபட தயாரிப்பாளர்களின் கோல்டன் காலம் ராம நாராயணன் தலைமையிலான காலம்தான்.
அதன் பிறகு ஆட்சிகள் மாற காட்சிகளும் மாறியது. முதலாளிகளாக பார்க்கப்பட்ட தயாரிப்பாளர்கள் ஆளுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து நடிகர்களின் கை திரைத்துறையில் ஓங்கியது.
இந்த சூழலில் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு பலம் வாய்ந்த தலைமை இருந்தால் நல்லது என்ற நிலையில் பிரமாண்டமான தயாரிப்பாளர் தாணு சங்கத்தின் தலைவராக ஆனார்.

இவர் தலைமையின் போது பிரமாண்டமான படங்களும், சிறு முதலீட்டு படங்களும் வரிசை கட்டியது. இதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கத்தின் வைப்பு நிதி மளமளவென உயர்ந்து பல கோடிகளை எட்டியது.
பிரபல நடிகர்கள் பலரும் பட தயாரிப்பில் ஈடுபட்டதால் தனித்துவமாக தெரிந்த முதலாளிகள் இமேஜ் கொஞ்சம் கொஞ்சமாக காணாமலேயே போனது.
அந்த சூழலில் தயாரிப்பாளர்கள் ஆக மாறிய நடிகர்கள் ஒன்று சேர்ந்து விஷால் தலைமையில் அணி அமைத்து தேர்தலில் களம் இறங்கினார்.
தேர்தலில் நிற்பவர்கள் பெரும்பாலானவர்கள் பிரபல நடிகர்கள் , இயக்குனர்கள் என்பதாலும் அப்போது மார்க்கெட்டில் பிசியாக இருந்தவர்கள் என்பதாலும், நடிகர் சங்கத்திலும் அவர்கள் ஆளுமையே இருந்ததாலும் இவர்கள் வெற்றி பெற்றால் கண்டிப்பாக திரையுலகில் பெரும் மாற்றம் வரும் என பலரும் வாக்களித்தனர்.
அதன்படியே விஷால் தலைமையில் புதிய அணி பதவிக்கு வந்த கொஞ்ச நாளில் சம அளவில் பாராட்டையும், விமர்சனத்தையும் எதிர் கொண்டது.
பல நூறு நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு மாதா மாதம் ஓய்வூதியம் கொடுக்கப்பட்டது. அதற்கான பணத்தை ஏற்கனவே சங்கத்தில் இருந்த வைப்பு நிதியில் இருந்து எடுத்தது, தயாரிப்பாளர் சங்கத்துக்கென தனியாக ஒரு அலுவலகத்தை பெருந்தொகையில் நடத்தியது, கடைசியில் கைவசம் இருந்த வைப்பு நிதி முழுதும் கரைந்ததும் அதை ஈடுகட்ட இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை நடத்தி நிதி திரட்ட முயன்று அதில் எதிர்பார்த்த அளவு நிதி வராமல் போனது என பல விமர்சனங்களில் விஷால் தலைமையிலான அணி சிக்கியதால் அதில் பதவி வகித்த பலரும் பதவியை ராஜினாமா செய்ய… ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத்தை அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்தது.
தனி அதிகாரி நியமிக்கப்பட்டார். அவருக்கு ஆலோசனை தர மூத்த தயாரிப்பாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இப்படி ஆளுமை நிறைந்த இடமாக தமிழ் சினிமாவை வழி நடத்திய முதலாளிகள் சங்கம் இப்போது வழி தெரியாமல் திணறியது.
தமிழ் சினிமாவின் தலையான தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த நிலை காரணமாக தியேட்டர் அதிபர்கள் சங்கம், பெப்சி, இயக்குனர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், டப்பிங் யூனியன் என பல அமைப்புகளின் தலைமைகள் தங்களது துதி பாடும் நபர்களை மட்டும் அருகில் வைத்துக் கொண்டு திரைத்துறையில் என்ன சிக்கல் வந்தாலும் அதை கண்டும் காணாமலும் போனார்கள்.
இதனால் தமிழ் திரையுலகம் கொஞ்சம் கொஞ்சமாக நசிந்து அழிந்து கொண்டிருந்தது.
இது போன்ற சூழலில் கொரானா என்ற கொடூர வைரஸ் தாக்கம் தமிழ் சினிமாவை ஒட்டுமொத்தமாக முடக்கிப் போட்டது.
இந்த கொரானா இடர் எப்போது நீங்கும் என்பதே இன்னும் புரியாத புதிராக இருக்கிறது.
அப்படியே நீங்கினாலும் உடனடியாக தமிழ் சினிமா தன் வழக்கமான பணியை தொடங்க எத்தனை மாதங்கள் ஆகும் என்பது தெரியவில்லை.
பல நூறு கோடிகளில் எடுக்கப்பட்ட பல படங்கள் முடங்கி இருக்கிறது. பல நூறு கோடிகள் செலவில் தொடங்கிய படங்கள் முடிக்க முடியாமல் பாதியில் நிற்கிறது.
இந்த பிரச்சினைகள் முடிந்தாலும் தியேட்டர்கள் திறப்பதில் சிக்கல் ஏற்படும். படங்கள் ரிலீசில் பெரும் சிக்கல் உருவாகும். அப்படியே தியேட்டர்கள் திறந்தாலும் இத்தனை நாட்கள் வீடுகளில் முடங்கி டிவியிலும், ஓ.டி.டி. டிஜிட்டல் முறையிலும் படம் பார்த்து பழகப்ட்ட மக்கள் அத்தனை சீக்கிரம் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவார்களா என்பதும் மில்லியன் டாலர் கேள்வி.

கொரானா காலத்திற்கு பின் தமிழ் சினிமா எதிர் கொள்ளப் போகும் யதார்த்த இடர்கள் ஏராளம்.
இது போன்ற சூழலில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஆளுமை நிறைந்த தலைமை ஏற்பட்டால்தான் பல சிரமங்களை கொஞ்சமாவது சரி செய்து தயாரிப்பாளர்களை தொழிலில் மூச்சுவிட வைக்க முடியும்.
ரிலீஸ் ஆகாமல் முடங்கி கிடக்கிற பல நூறு படங்களை டிஜிட்டல் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து சிரமத்தை போக்க முடியும்.

தயாரிப்பாளர் நலன் காக்கும் அணியில் தலைவர் பதவிக்கு முரளி ராமசாமி போட்டியிடுகிறார். இவரது அணியில் சந்திரபிரகாஷ் ஜெயின், ராதாகிருஷ்ணன், ஜேஜேஆர் ராஜேஷ், மைக்கேல் ராயப்பன் ஆகியோர் நிர்வாக பதவிகளுக்கு போட்டியிடுகிறார்கள்.
அப்பா இராம நாராயணன் போல தயாரிப்பாளர்கள் ஆதரவை முரளி பெறுவாரா பார்க்கலாம்.
அதே போல தயாரிப்பாளர் டி.சிவா தலைமையில் ஜே.எஸ்கே சதீஷ்குமார், தேனப்பன், ஹெச்.முரளி, தனஞ்செயன், ஆர்.கே.சுரேஷ் என ஒரு டீம் களம் இறங்கி இருக்கிறது.
தயாரிப்பாளர் தாணு தலைமையில் எஸ்.ஏ.சி, கமீலா நாசர், டி.ஜி.தியாகராஜன் உட்பட ஒரு டீம் களமிறங்குகிறார்கள்.
கடந்த முறை வெற்றி பெற்ற விஷால் அணி இந்த முறை வாக்களிக்க வருவார்களா என்பதே கேள்விக்குறி.
மொத்தம் சுமார் 1300 வாக்குகள் இருப்பதாக தெரிகிறது. அதில் ஆயிரம் வாக்குகள் பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மும்முனை போட்டியில் தமிழ் சினிமாவின் தலையாக மாறப் போவது எந்த அணி…
ஜூன் 21ம் தேதி நடைபெற உள்ள தேர்தல் முடிவுகள் அன்று மாலையே எண்ணி முடித்து அறிவிப்பார்கள் அதுவரை காத்திருப்போம்.
– கோடங்கி
