
பணக்காரர்களுக்கு வங்கி கடனை தள்ளுபடி செய்து ஏழை மக்களுக்கு பச்சை துரோகம் செய்யும் மோடி அரசு என ஆவோச அறிக்கை வெளியிட்டார் சீமான்.
50 இந்திய பணக்கார தொழிலதிபர்கள் வாங்கிய வங்கி கடன் தொகையான ரூ.68,607 கோடி கடன் கணக்கு நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் கணக்கியல் ரீதியான கடனை நீக்குவது என்பது முழுவதுமாக கடனை நீக்குவது ஆகாது என்றும், கணக்கில் நீக்கப்பட்டிருந்தாலும் அவர்களிடமிருந்து கடன் தொகையை பெற சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “கொரோனாவினால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. ஆனால் அதை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை விட்டு விட்டு பெருமுதலாளிகளின் கடனை நீக்குவது மோசமான செயல். மத்திய அரசு, முதலாளிகளின் நலனுக்கென்று முழுமூச்சாய்ப் பாடுபடத்துடிப்பது வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த இந்நாட்டு மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் “ஆகவே, ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் அதிகாரக் குவிப்பிலும், எதேச்சதிக்காரப் போக்கிலும், முதலாளித்துவ ஆதரவு நிலைப்பாட்டிலும் ஈடுபட்டு, பிழையான முடிவுகளாலும், தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும் நாட்டு மக்களை வாட்டி வதைத்துச் சுரண்டலில் ஈடுபடும் இக்கொடுங்கோன்மை அரசு வீழ்ந்தொழியும் நாள் வெகு தொலைவில் இல்லை என மத்திய அரசிற்கு இதன் வாயிலாக எச்சரிக்கை விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
