
நாட்டையே உலுக்கிய மிக முக்கியமான சம்பவம் பாபர் மசூதி இடிப்பு.
இந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் வெடித்த கலவரத்தால் சுமார் ப்2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த கலவரத்துக்கு பா.ஜ.க மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தர பிரதேச முதல்வர் கல்யாண்சிங், வினய் கத்தியார், விஹெச்பி தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 21 பேர் தான் காரணம் என அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த கலவர வழக்கு லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பை இந்த ஆண்டு ஏப்ரல் இறுதிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கொண்டு வரப்பட்ட ஊரடங்கால் மேலும் தாமதம் ஏற்பட்டதால் வழக்கின் காலக்கெடுவை நீட்டிக்க சிறப்பு நீதிமன்றம் சார்பில் அனுமதி கோரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளான ஆர்.எப்.நாரிமன், சூர்யகாந்த் ஆகியோர் முன்னிலையி்ல் காணொலியில் நேற்று நடைபெற்றது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், பாபர் மசூதி வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம் காலக்கெடுவை நீட்டிக்க எழுதிய கடிதம் கடந்த 6-ம் தேதி கிடைத்தது. நீதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கிட காலக்கெடுவை நீட்டிக்கிறோம்.
சாட்சியங்களை உறுதி செய்யவும், விசாரிக்கவும் தேவைப்பட்டால் நீதிபதி யாதவ், காணொலி முறையை பயன்படுத்திக் கொள்ளலாம். விசாரணை அனைத்தும் ஏறக்குறைய முடியும் நிலைக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள்ளாக அனைத்து விசாரணைகளையும் முடித்து தீர்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.
மிக முக்கியத்துவம் வாய்ந்த கலவர வழக்கு என்பதால் இந்த தீர்ப்பை தெரிந்து கொள்ள நாடே காத்திருக்கிறது.
