
வித்தியாசமான முயற்சி
‘ஆறாம் வேற்றுமை’
– கோடங்கி
‘ஆறாம் வேற்றுமை’ கதை தொடங்குவதற்கு முன்பு மலை கிராமங்களின் விவரங்கள், அதன் மக்கள்… அதில் இருந்து விலகி நிற்கும் மர்மம் நிறைந்த ‘கூனிக்காடு’ மலை கிராமம்… என பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியபடியே தொடங்குகிறது படம்..!
கூனிக்காடு, கோட்டைக்காடு என்ற இரு மலைக் கிராமங்கள். இதில் கோட்டைக்காடு மலை கிராமத்தில் திடீர் திடீரென ஆட்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைகளை யார் செய்வது என்பது தெரியாமல் கிராமத்து ஆட்கள் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிகள் தனி குழு வைத்து கொலையாளியை பிடிக்க வருகிறார்கள். கொலைகள் ஏன் நடக்கிறது. கொலையாளியை போலீஸ் பிடித்ததா கூனிக்காடு, கோட்டைக்காடு இரண்டுக்கும் ஏற்பட்ட பகை என்ன, காட்டுவாசி கூட்டம் என்ன ஆனது என்பதை விளக்குகிறது ‘ஆறாம் வேற்றுமை’ படம்.

கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நாயகி கோபிகா. அம்மா மட்டுமே ஆதரவு. இவரை, அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார் வன அதிகாரி சேரன்ராஜ். கோபிகாவை ஊர் நாட்டாமை பார்த்து அழகில் மயங்குகிறார். அவரை திருமணம் செய்ய கோட்டைக்காடு தலைவராக இருக்கிற அழகுவிடம் கேட்கிறார். ஊர் நாட்டாமையிடம் நிலப்பத்திரங்களை வைத்து கடன் வாங்கி விவசாயம் செய்யும் கிராம மக்களிடம் அழகு இந்த விஷயத்தை சொல்கிறார்.
இதற்கிடையில், கோட்டைக்காடு கிராமத்திற்கு எதிர் மலையில் இருக்கிறது கூனிக்காடு. இங்கு வாழ்பவர்கள் அனைவரும் பேசத் தெரியாத காட்டு வாசிகள். நாகரீகம் கொஞ்சமும் இல்லாத வெளிமக்கள் நடமாட்டம் இல்லாத கிராமம். பகலில் யாரும் வெளியே வராமல் இரவில் மட்டும் வெளியில் வந்து வேட்டையாடி வாழ்ந்து வரும் காட்டுவாசி இனம். இந்த ஊரில் தன் நண்பர்களுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் அஜய்.

ஒரு நாள் பகலில் யாருக்கும் தெரியாமல் கோட்டைக்காடு எல்லைக்கு வரும் அஜய், அங்கு நாயகி கோபிகாவை பார்த்து காதல் வயப்படுகிறார். கோபிகாவுக்கும் காட்டுவாசியின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.
இந்த சூழலில், நாட்டாமை பெண் கேட்கும் விவரம்தெரிந்து கோபிகா அதிர்ச்சி அடைகிறார்….
வன அதிகாரி எண்ணம் நிறைவேறியதா, ஊர் நாட்டாமைக்கு கல்யாணம் நடந்ததா, கோபிகாவும் காட்டுவாசி அஜய்யும் இணைந்தார்களா, தொடர் கொலைகளுக்கு யார் காரணம் என்பதை இயக்குனர் அவருக்கே உரிய பாணியில் சொல்லியிருக்கிறார்.
நாயகன் அஜய்க்கு படத்தில் வசனங்கள் ஏதும் இல்லை. அங்க அசைவுகளில் நடித்திருக்கிறார். காட்டுவாசிகள் போல் வேகமாக ஓடுவது, நடப்பது, மரத்துக்கு மரம் தாவுவது, மலை ஏறுவது, உட்காரும் ஸ்டைல் என அனைத்திலும் கதாநாயகன் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகி கோபிகா பாவாடை தாவணியில் வலம் வந்து செல்கிறார். தேவையான இடங்களில் நடித்திருக்கிறார். நாயகியின் தோழியாக வரும் உமாஸ்ரீயும் கொடுத்த கதாபாத்திரத்தை மீறாமல் நடித்திருக்கிறார்.

வழக்கமாக குண்டக்க மண்டக்க வசனம் பேசி சிரிக்க வைக்கும் யோகிபாபு வசனம் எதுவும் பேசாமலேயே உடல் மொழியில் ரசிக்க வைத்து கடைசியில் அனுதாபத்தையும் அள்ளிக் கொள்கிறார். வனஅதிகாரி சேரன்ராஜ், ஊர் தலைவர் அழகு ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
வழக்கமான மலைவாழ் மக்கள், நாகரீகமே இல்லாத காட்டுவாசி மக்கள் என இரண்டு பிரிவு மலைகிராம மக்களின் வாழ்க்கை முறையை முதல் முறையாக தமிழ் சினிமாவில் மிக வித்தியாசமாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார் இயக்குனர் இயக்குனர் ஹரி கிருஷ்ணா.
ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்டு பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட படமான ‘அப்போகலிப்டோ’காட்டுவாசி படத்தின் தாக்கம்போல இப்படத்தின் தோற்றம் இருந்தாலும், தமிழ் சினிமாவுக்கே உரிய காதல், மோதல், சோகம் என பல விஷயங்களை உள்ளே புகுத்தி மற்ற படங்களில் இருந்து வேற்றுமை காட்டியிருக்கிறார் இயக்குனர்.
தமிழ் படங்களில் இப்படி வித்தியாசமான முயற்சிகள் எடுக்கும் இயக்குனர்கள் மிக குறைவு. அப்படியே எடுக்கிற படங்களையும் கதை சரியில்லை, காட்சி சரியில்லை, ஹீரோ சரியில்லை, ஹீரோயின் சரியில்லை என்று குறை சொல்லியே ஒரு கூட்டம் நிராகரிக்கும். இன்னொரு கூட்டம் படம் கோடிகளில் எடுக்கப்படவில்லை, பிரமாண்ட விளம்பரங்கள் இல்லை என்று நிராகரிக்கும். இந்த ‘ஆறாம் வேற்றுமை’ படம் பல குறைகளோடு இருந்தாலும் வித்தியாசமான முயற்சி. தமிழ் சினிமாவில் இப்படி முயற்சிகள் எடுக்கும் தயாரிப்பாளர்கள் குறைவு என்பதால் ‘ஆறாம் வேற்றுமை’ படத்தை வரவேற்கலாம்.
ஆனால், நிஜத்தில் ‘ஆறாம் வேற்றுமை’ படத்தின் காட்சிகளும், காட்சிப்படுத்தப்பட்ட விதமும் அறிவழகனின் கேமரா பணியும் மிக அருமை. அதேநேரம், கதையிலும் நாகரீகமற்ற காட்டுவாசிக்கும் கதாநாயகிக்குமான காதல் காட்சிகளிலும் இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் மேம்பட்டிருக்கும்.

அதேபோல, வழக்கமான தமிழ்சினிமாபோல ‘நாட்டாமை மிரட்டல், வன ரேஞ்சர் வில்லத்தனம், நள்ளிரவில் மலை கிராமத்தில் குத்தாட்டம் போன்றவற்றை தவிர்த்திருந்தால் ‘ஆறாம் வேற்றுமை’ இன்னும் வித்தியாசப்பட்டிருக்கும்.
கணேஷ் ராகவேந்திரா இசையில் பாடல்கள் சினிமாத்தனம். இதுபோன்ற படங்களில் பாடல்கள் இடம்பெறாமல் இருப்பது கதையோட்டத்தையும், காட்சிகளின் வலிமையையும் மேம்படுத்தும். பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது.

மொத்தத்தில் ‘ஆறாம் வேற்றுமை’ வரவேற்க வேண்டிய வித்தியாச முயற்சி…!
கோடங்கி
