
விமானங்கள் திடிரென ரத்தானதால் பயணிகள் அவதி… குழப்பத்தில் விமான போக்குவரத்து துறை!
கொரானா பாதிப்பு காரணமாக பொது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இன்று முதல் உள்நாட்டு விமான சேவையை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கொல்கத்தா போன்ற பல மாநிலங்கள் முதலில் விமான சேவைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் விமான இயக்கத்திற்கு அனுமதி அளித்தனர்.
விமான சேவையில் முக்கிய பங்கு வகிக்கும் மும்பை விமான நிலையத்தில் தலா 25 விமானங்கள் தரையிறங்கவும், புறப்படவும் மட்டுமே மகாராஷ்டிர அரசு அனுமதி அளித்தது. மேலும் பல மாநிலங்கள் தானாகவே பல்வேறு வழிகாட்டுதல் நடைமுறைகளை வெளியிட்டது. இதனால் குழப்பம் நிலவியது.
அதே நேரம் பயண டிக்கெட் அனைத்தும் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து நாட்டின் பல்வேறு இடங்களுக்கு செல்ல இருந்த 82 விமானங்கள் திடீரென முன்னறிவிப்பு ஏதுமின்றி ரத்து செய்யப்பட்டன. இதனால் விமான நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள் பெரும் குழப்பம் அடைந்தனர். கடைசி நிமிடம் வரை தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்.
டெல்லியில் இன்று 125 விமானங்கள் புறப்பட்டு செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதேவேளையில் 118 விமானங்கள் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திலும் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமானிகள் விமான நிலையத்திற்கு வெளியே ஏமாற்றத்துடன் காத்துக் கிடந்தனர்.
மொத்தத்தில் விமானங்களை இயக்கும் விஷயத்தில் பெரும் குழப்பம் நிலவி வருவதால் இணையத்தில் முன்பதிவு செய்து கொண்ட பயணிகள் நிலமைதான் பரிதாபமாக உள்ளது.
