சனிக்கிழமை, மே 2
Shadow

சீனாவின் அத்துமீறல் குறித்து பேச 19ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மோடி அழைப்பு!

 

 

லடாக் எல்லை மோதல் சீனாவின் அத்துமீறல் குறித்து பேச 19ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மோடி அழைப்பு!

இந்தியா-சீனா இடையே நீண்டகாலமாக தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை இப்போது பூதாகரமக வெடித்துள்ளது.  எல்லையில் நேற்று முன்தினம் இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு படைகளையும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்திருப்பதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது. மேலும் சிலர் பலத்த காயமடைந்திருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதேபோல் சீனா தரப்பில் 43 வீரர்களின் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எல்லை மோதலைத் தொடர்ந்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள், தலைமை தளபதி ஆகியோருடன்  ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், இந்தியா-சீனா எல்லைப்பிரச்சினை தொடர்பாக விவாதிக்க, வரும் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜூன் 19-ம்தேதி மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்திருப்பதாகவும். காணொலி வாயிலாக நடைபெறும் இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

லடாக் எல்லை மோதல் தொடர்பாக பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

569 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன