
சாத்தான்குளத்தில் வியாபாரிகளை அடித்துப் படுகொலை செய்த போலிஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்க!
தமிழக அரசுக்கு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!
சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருக்கும் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டபோது பணியில் இருந்த காவல்துறையினர் அனைவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து, உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், மற்றவர்கள் பணிமாற்றல் செய்யப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை போதுமானதல்ல. இந்தப் படுகொலை நடந்தபோது காவல் நிலையத்தில் பணியில் இருந்த அனைவர்மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்படவேண்டும். அவர்கள் அனைவரையும் கைதுசெய்து விசாரிக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
1995 ஆம் ஆண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அளித்த வழிகாட்டுதலின் அடிப்படையில் வேறு பகுதிகளைச் சேர்ந்த மருத்துவர்களைக்கொண்டு பிணக்கூராய்வு நடத்தப்படவேண்டும். அத்துடன் அதை வீடியோ பதிவு செய்யவேண்டும். காவல் மரணங்கள் நடந்தால் உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்குவதோடு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டுமெனவும் அந்தத் தொகையை குற்றவாளிகளிடமிருந்து அரசு வசூலிக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம்.
காவல் மரணங்களில் இந்தியாவில் தமிழ்நாடு 2 ஆவது இடம் வகிப்பதாக 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவண மைய அறிக்கை ( என்சிஆர்பி) கூறுகிறது. தமிழ்நாட்டில் 2018 ஆம் ஆண்டில் மட்டும் 12 பேர் காவல் நிலையங்களில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். 2020 ஜனவரி வரை அந்தக் கொலை வழக்குகளில் ஒன்றில்கூட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. தமிழக காவல்துறை எந்த அளவுக்கு மக்கள் விரோதமாக நடந்துகொள்கிறது என்பதற்கு இதுவொரு சான்றாக உள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
