வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

ஏற்கனவே இதுபோன்ற புகாரில் சிக்கி பணிமாறுதல் பெற்றவராம் சஸ்பெண்ட் ஆன சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்!

 

 

சஸ்பெண்ட் ஆன சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்கமே சிக்குபவர்களை அடித்து துவைப்பதுதானாம்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்ததுடன், கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், சாத்தான்குளத்தில் தங்கியிருந்து சாட்சிகளிடமும், கோவில்பட்டி சிறையிலும் நேரடியாக விசாரணை நடத்த அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பெர்னார்டு சேவியர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார்.

தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் ஏற்கனவே உதவி ஆய்வாளர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் இதற்கு முன் திருநெல்வேலி இராதாபுரம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியில் இருந்த போது இதே போல பலரை அடித்து உதைத்ததால் கடும் எதிர்ப்பை சந்தித்து பல புகார்களுக்கு பிறகு பணிமாற்றம் பெற்றவராம் இந்த ஸ்ரீதர்.

அதே போல சப் இன்ஸ்பெக்டர் ரகு கணேஷுக்கு கொம்பன் என்ற அடைமொழியும் உண்டாம். லத்தியை வைத்து விசாரணைக்கு வருகிறவர்களை பின்புறம் அடித்து உதைத்து மிரட்டி விடுவது இவரின் வழக்கம்.

இன்னொரு சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் இதற்கு முன் பணியாற்றிய இடத்தில் தவறான நடவடிக்கை காரணமாக பணிமாறுதல் செய்யப்பட்டவராம்.

இப்படி சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் அப்பா மகன் இரட்டைக் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் இந்த போலீசார் மீது பல்வேறு புகார்கள் இருப்பது இவர்கள் துறைக்கே தெரிந்தும் இதுவரை சஸ்பெண்ட் உத்தரவோடு நிறுத்தி இருக்கிறார்கள்.

நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிப்பதால் இதில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

314 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன