
சாத்தான்குளம் அரசு டாக்டர் வெண்ணிலா மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்!
சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிமுறையை மீறியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இருவரும் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக உறவினர்கள் மற்றும் பொது மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தந்தை, மகன் இருவரையும் போலீசார் விடிய, விடிய அடித்ததாக மாஜிஸ்திரேட்டின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தததால், சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமார் விசாரணை செய்தார். ஜெயராஜ் கடை அமைந்துள்ள பகுதியிலும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த சூழலில் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை டாக்டர் வெண்ணிலா, மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்பு ஆஜரானார்.

15 நாள் விடுப்பில் சென்ற சாத்தான்குளம் அரசு டாக்டர் வெண்ணிலா தற்போது மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்பு ஆஜராகி உள்ளார். தந்தை, மகனை கோவில்பட்டி சிறையில் அடைக்க அரசு மருத்துவர் வெண்ணிலா தகுதிச்சான்று (பிட்னஸ் சான்றிதழ்) வழங்கி உள்ளார்.
இந்த சூழலில், திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்பு ஆஜரான வெண்ணிலாவிடம் விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையின் போது பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெண்ணிலா கூறியுள்ளார்.
மருத்துவ உடல் தகுதி சான்று வாங்க வரும்போது இருவருக்கும் உடலில் கடுமையான காயங்கள் இருந்தது என்றும், இரத்த அழுத்தம் மிக அதிகமாக இருந்தது என்றும் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
