வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

உண்மையை கண்டுபிடிக்க 12 மணிநேரம் சிபிசிஐடி தனிதனியாக விசாரணை!

 

உண்மையை கண்டுபிடிக்க 12 மணிநேரம்
சிபிசிஐடி தனிதனியாக விசாரணை!

சாத்தான்குளம் தந்தை மகன் கொடூர மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போலீசாருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தில் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொடூர மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கை கையில் எடுத்ததும் விசாரணை வேகம் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருகிறது. இப்போது சிபிசிஐடி விசாரணை முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
எப்ஐஆர் பதிவு செய்த எஸ்ஐ ரகுகணேஷ் நேற்று இரவு கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 4 போலீஸ் கைது செய்யப்பட்டார்கள். அதில் மிக முக்கியமான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைதுதான் மிக பரபரப்பாக அமைந்தது.

கைது செய்யபட்டவர்களை தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு வந்து, தீவிர விசாரணை செய்தார்கள். அதோடு, ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.
சிபிசிஐடி விசாரணை அதிகாரி டிஎஸ்பி அணில் குமார், சிபிசிஐடி ஐஜி சங்கர் உள்ளிட்டோர் தனி தனியாக விசாரணை நடத்தினார்கள். மொத்தமாக நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று இரவுவரை சுமார் 12 மணி நேரம் இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தனித்தனியாக விசாரணை நடத்தப்படுவதற்கு முன்பு இவர்கள் யாரையும் ஒன்றாக பேச அனுமதிக்கவில்லை. ஒவ்வொருவரையும் தனித்தனியாகவே வைத்திருந்தார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையிலான டீம் கூடவே கண்காணித்துக் கொண்டிருந்தது. இவர்கள் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
விசாரணையில் ஏதாவது உண்மைகளை மறைகிறார்களா? நடந்த விஷயத்தை சொல்கிறார்களா என்பதை கண்டு பிடிக்க இவர்களிடம் சிபிசிஐடி தனி தனியாக விசாரணை செய்ததாக தெரிகிறது.
ஜெயராஜ் பென்னிக்ஸ் இருவரும் ஸ்டேஷன் வருவதற்கு முன்பு கடை வாசலில் நடந்தது என்ன என்பது தொடங்கி கிளை சிறையில் அடைத்தவரை அத்தனை விவரங்களையும் தனித்தனியாக சொல்லச் சொல்லி அவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் இவர்கள் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். மீண்டும் இவர்களை சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வாய்ப்பு உள்ளது. அப்போதும் இதேபோல தனித்தனியாக விசாரிக்கப்படுவார்கள் என தெரிகிறது. முதற்கட்ட விசாரணையில் சொன்னதை மறைக்காமல் மீண்டும் சொல்கிறார்களா அல்லது ஏதாவது பொய்யான தகவல்களை சொல்கிறார்களா என்ற ரீதியில் விசாரணை இருக்கும் என தெரிகிறது.
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட அனைவரின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த செல்போன்களில் ஏதாவது ஆதாரங்கள் கிடைக்கிறதா என்பதையும் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்வார்கள். ஏற்கனவே சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் அழிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை மீட்டெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. அந்த காட்சிகள் கிடைக்கும்பட்சத்தில் இந்த வழக்கின் முக்கிய சாட்களாக அவை மாறும் என்று தெரிகிறது.

159 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன