சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

சாத்தான்குளம் விவகாரம்… முதல்வருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

 

சாத்தான்குளம் வழக்கு நேர்மையாக நடக்க உள்துறையை முதல்வரிடம் இருந்து மாற்ற வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் புதியமனு!

சாத்தான்குளம் தந்தை மகன் கொடூர மரண வழக்கு விசாரணை முடியும் வரை உள்துறை பொறுப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து வேறு அமைச்சருக்கு மாற்றி உத்தரவிடும்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் அப்பா மகன் மரண வழக்கு நாடுமுழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கில் ஒவ்வொரு நாளும் புதுப்புது ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த வழக்கில் புகார் கிளம்பிய முதல் நாளில் இருந்தே தவறு செய்த போலீஸ் குற்றவாளிகளை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அப்படியிருந்த போதும் உயர்நீதிமன்ற மதுரைகிளை தாமாக முன்வந்து வழக்கை கையில் எடுத்ததால் வழக்கின் வேகம் அதிகரித்தது. அதன் காரணமாக பல அதிரடி திருப்பங்கள் தமிழகத்தில் நடந்து வருகிறது.
முதல்முறையாக ஒரு காவல் நிலையம் சுமார் 4 நாட்களாக வருவாய்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 சப்இன்ஸ்பெக்டர் உட்பட 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரு ஸ்டேஷனில் இருந்த அனைத்து போலீசாரும் இடமாற்றம் செய்யப்பட்டார்கள். மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யபட்டார்கள்.
சாத்தான்குளம் அப்பா மகன் போலீஸ் தாக்குதலில் பலியான சம்பவம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது ‘ஒருவர் மூச்சு திணறலால் இறந்தார். இன்னொருவர் காய்ச்சல் காரணமாக இறந்தார்’ என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம், முதல்வர் பேசிய போது பலியானவர்களின் பிரேதபரிசோதனை அறிக்கை எதுவும் வரவில்லை. பிரேதபரிசோதனை எதுவும் செய்யப்படவும் இல்லை. அப்படியிருக்குமபோது முதல்வர் அப்படி பேசியது பெரும் அதிர்ச்சியையும் போலீஸ் கொலைக் குற்றவாளிகளை காப்பாற்ற முதல்வர் முயற்ச்சிக்கிறாரே என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
இதை உணர்த்தும் விதமாக அந்த மாவட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ ‘இது லாக்கப் மரணம் அல்ல’ என்று கூறி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்த சூழலில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டார்.
வழக்கை தாமதபடுத்தவேண்டும் என்பதற்காகவே சிபிஐ விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டிருப்பாக பல்வேறு எதிர்ப்புகள் வந்ததும், ஏற்கனவே இந்த வழக்கை மிக கவனமாக கண்காணித்து வரும் மதுரை உயர்நீதிமன்ற கிளை சிபிஐ வழக்கை கையில் எடுப்பதற்குள் சிபிசிஐடி விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.
வழக்கு கையில் வந்ததும் சிபிசிஐடி போலீசார் 12 குழுக்களாக பிரிந்து சுமார் 80 அதிகாரிகள் பல இடங்களில் சென்று விசாரணை நடத்தி ஒரே நாளில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 2 எஸ்ஐகள், 2 போலீசார் மீது முதற்கட்டமாக கொலை வழக்கு பதிவு செய்தனர். அதோடு, தொடர்புடைய ஒவ்வொருவரையும் தேடிப்பிடித்து கைது செய்தார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த கைது நடவடிக்கையின்போது சிபிசிஐடி போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் பிரபல அரசியல் பிரமுகரும் மூத்த அமைச்சருக்கு நெருக்கமானவரின் ஆதரவோடு ஊர் ஊராக காரில் தப்பி ஓடியிருக்கிறார். அப்படியிருந்தும் சிபிசிஐடி போலீஸ் பிடியில் சிக்கினார் ஸ்ரீதர்.

இந்த சூழலில், மருத்துவர்கள் அறிக்கை வருவதற்கு முன்பே அப்பா மகன் மரணம் குறித்து முதல்வர் சர்ச்சையான கருத்துக்களை சொன்னதால் இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடக்காது என்றும், முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் சிபிசிஐடி போலீசார் இருக்கிறார்கள் என்பதால் முதல்வர் வகிக்கிற உள்துறை பொறுப்பை வேறு அமைச்சருக்கு வழக்கு முடியும்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுதொடர்பாக ராஜராஜன் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “சாத்தான்குளம் இரட்டை மரணம் விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்பே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘இந்த சம்பவத்தில் பலியான தந்தை,மகன் இருவரும் உடல்நலக் கோளாறு காரணமாக உயிரிழந்தார்கள்’ என போலீஸாரைக் காப்பாற்றும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.
இது அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்க தகுந்தது அல்ல. எனவே, இந்த வழக்கு விசாரணை முடியும் வரை உள் துறை பொறுப்பை தமிழக முதல்வர் வகிக்கக் கூடாது. அவர் வசமுள்ள உள் துறையின் கீழ்தான் சிபிசிஐடி போலீஸ் செயல்படுகிறது.
எனவே, வழக்கு நேர்மையான முறையில் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுகிறது. அதனால், உள் துறை பொறுப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து வேறு ஒருவருக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
அதோடு, இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் நடைபெறவும் உத்தரவிட வேண்டும்”எனக் குறிப்பிட்டுள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் இப்படி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

202 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன