
மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட 3 மாதத்தில் மீண்டும் விருதுநகர் மாவட்ட செயலாரான பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…!
தமிழக அமைச்சர்களில் பலரும் அடிக்கடி ஏதாவது கருத்தை சொல்லி சர்ச்சையில் சிக்குவார்கள். அதில் அதிரடியாக எதையாவது கூறி விட்டு பெரும் சர்ச்சையில் சிக்குபவர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக அடிக்கடி கருத்து வெளியிடுவார். பாஜக தலைவர்களை விட பிரதமர் மோடியை புகழ்வதில் ராஜேந்திரபாலாஜி தனி இடம் பிடிப்பார். அதோடு, ரஜினிக்காக அடிக்கடி குரல் கொடுப்பவர். இப்படி பல அதிரடிகள் செய்த ராஜேந்திரபாலாஜி கடந்த மார்ச் மாதம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பேசிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி அனைவரிடம் பெரும் கண்டனத்தை பெற்றது. இதையடுத்து விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து உடனடியாக ராஜேந்திரபாலாஜி விடுவிக்கப்பட்டார். அதற்கான காரணம் எதையும் அப்போது தெரிவிக்கப்படவில்லை. அமைச்சர் பதவியில் இருந்தும் இவர் நீக்கப்படலாம் என்ற பேச்சும் எழுந்தது.
அப்படியிருந்தபோதும் விருதுநகர் மாவட்ட செயலாளராக புதிதாக யாரையும் நியமிக்காமல் இருந்தார்கள். இந்த சூழலில், 3 மாதங்களுக்கு பின் மீண்டும் அந்த மாவட்டத்தின் பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நியமித்து அதிமுக சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சாத்தான்குளம் அப்பா மகன் படுகொலை விஷயத்தில் முதல்வர் எடப்பாடிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிற நிலையில், கட்சிக்குள்ளும் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படுவதை விரும்பாத எடப்பாடி பழனிச்சாமி இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.
பதவி பறிக்கப்பட்ட 3 மாதத்தில் மீண்டும் அதே பதவியை பெற்று தனக்கென தனி செல்வாக்கை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
