செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

ஹர ஹர மகாதேவகி விமர்சனம்

 

மரணத்திற்கு பின் இறுதி காரியங்களுக்கு தேவை படும் வண்டி, பூ அலங்காரம், மேளதாள ஆட்களை அனுப்பும் தொழில் செய்கிறவர் கதாநாயகன். பொறியியல் படித்தாலும் இந்த தொழிலை விரும்பி செய்கிறார்.
கோயில் குளத்தில் நீராடிவிட்டு துண்டுடன் கரையேறும் கதாநாயகனை அதே குளத்தில் தோஷ நிவர்த்திக்கு மூழ்கி எழும் கதாநாயகி நிக்கி கல்ராணி பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்து “கடவுளே… கடவுளே… கடவுளே” என கத்துகிறார்.
அதன் பிறகும் ஒரு முறை பாத்ரூமிலும், இன்னொரு முறை தெருவிலும் ஏடாகூடமாக பார்க்க இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. அதுவே காதலாகவும் மாறி கடைசியாக காதலும் பிரேக் அப் ஆகிவிடுகிறது.

காதலித்த போது ஒருவருக்கு ஒருவர் வாங்கி கொடுத்த பரிசு பொருட்களை ஒரு ரிசார்ட்டில் திருப்பி கொடுக்க முடிவு செய்கிறார்கள். இந்த பொருட்களை அரசியல் கட்சி கொடுத்த பையில் வைத்து எடுத்து செல்கிறார் ஹீரோ.

 

தேர்தலில் அனுதாப ஓட்டில் ஜெயிக்க அரசியல்வாதி ரவிமரியா ஒரு பையில் வெடிகுண்டு வைத்து மொட்டைராஜேந்திரன்,கருணாகரனிடம் கொடுத்து அனுப்புகிறார். வழியில் ஹீரோ காரில் வெடிகுண்டு பையுடன் மொட்டை ராஜேந்திரன் லிப்ட் கேட்டு ஏற… பை மாறிவிடுகிறது.

அதே போல பால சரவணன் கள்ள நோட்டுகளை வைத்து அதே போல் ஒரு பை எடுத்து வருகிறார்.

ஒரு வேன் நிறைய அதே போல பைகள் வருகிறது.

அந்த ரிசார்ட்டில் ஒரு குழந்தையை கடத்தி வைத்து பணம் கேட்டு மிர்ட்டுகிறார்கள். அதற்கும் அதே போன்ற பையில் பணம் வைக்கப் படுகிறது.

இந்த பைகள் மாறுவதால் ஏற்படும் குழப்பம் தான் கதை.

வெடிகுண்டு வெடித்ததா… பணம் என்ன ஆனது… உடைந்த காதல் நிலை என்ன என்பதை இயக்குனர் அவருக்கே உரிய பாணியில் சொல்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குஷ்புவை “அப்படி” பார்த்து கடவுளே கடவுளே சொன்னது போல ஹீரோவை “அப்படி” பார்த்து ஹீரோயின் கடவுளே கடவுளே என்கிறார். அதை ரசித்துவிட்டு இதை ஆபாசம் என எப்படி சொல்ல முடியும்.

பாம்பு வசனங்களை பல படங்களில் வைத்திருக்கிறார்கள். என்ன இதில் கொஞ்சம் ஓவர்டோஸ்.

ரிசார்ட்டில் அரசியல் தலைவர் மனைவி பேசும் வசனம் ஓவரோ ஒவர்.

பொதுவாக ஹீரோ அறிமுகம் ரொம்ப ஹீரோயிசமாக காட்டப்படும் இந்த சூழலில் இறந்த உடலை வைக்கும் ப்ரீசர் பாக்சில் ஹீரோ அறிமுகம் அசத்தல்.

அதே போல காதல் சொல்ல மரண ஊர்வலம் நடத்தி சாவுக்கு ஆடுபவர்களை ஆட வைத்து ஹீரோயினிடம் ஹீரோ காதல் சொல்லும் காட்சியும் புதுசு.

ஹீரோயின் நிக்கி கல்ராணி முதல் காட்சியில் ஒரு நொடி வந்து போகும் அந்த கிளாமரைத்தாண்டி படம் முழுதும் மூடியே வருகிறார். அவரின் மற்ற படங்களில் இருந்த கவர்ச்சியில் ஒரு சதவீதம் கூட இதில் இல்லை.

படம் தொடங்கி டைட்டில் போடும் போது ஒரு ஹஸ்கி வாய்ஸ் படம் பற்றி கதை சொல்கிறது அதில் இருக்கும் ஏக்கம்… ஏடாகூடம் கூட முழு படத்தில் இல்லை என்பது தான் உண்மை.

ஒரு சில வசனங்களை நீக்கி விட்டு, சில காட்சிகளில் கத்திரி போட்டால் சென்சார் U கொடுக்கும் படமாகிவிடும். ஆனால் A வாங்கி இருக்கிறார்கள்.

சென்சாரில் U வாங்கி ஹீரோயினை ஆடை உரித்து ஆடவைக்கும் படங்களுக்கு மத்தியில் A வாங்கியும் ஹீரோயினை அழகாக காட்டியிருக்கும் இயக்குனர் சந்தோஷுக்கு சபாஷ்…

ஒரே மேடை ஒரு பக்கம் இந்து சாமியார் இன்னொரு பக்கம் கிறிஸ்தவ போதகர் காமெடிக்கு என்று மதங்களை நக்கல் அடித்த காட்சியை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.

செல்பி மோக நல்ல போலீஸ் அதிகாரியாக சுரேஷ்.

பின்னணி இசை அளவுக்கு பாடல்கள் ரசிக்கவில்லை.

அடல்ஸ் ஒன்லி என அழைக்கப்படும் படத்தை நம்பி வரும் இளசுகள் ஏமாறுவது நிச்சயம்.

காமெடி என சில இடங்களில் மட்டுமே காம நெடி வீசுகிறது.

காதல்… அரசியல்… இதை வைத்து கதை உருவாக்கினால் இரட்டை அர்த்த வசனங்களும் , கெட்ட வார்த்தைகளும் சகஜம் என்பதால் ஹர ஹர மகாதேவகியிலும் பல இடங்களில் இது போன்ற வசனங்கள் இடம் பிடித்துள்ளது.

மொத்தத்தில் ஹர ஹர மகாதேவகி ஓடும்..!

கோடங்கி

 

 

 

 

 

 

394 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன