
இயக்குனரின் ஆழ்மன அழுக்கை வெளிப்படுத்தும் “ஸ்பைடர்” –
விமர்சனம் கோடங்கி
மித மிஞ்சிய பணம், தகுதிக்கு மீறிய செல்வாக்கு, தான் என்ற ஆணவம் இவை எல்லாம் எப்போது ஒரு நல்ல படைப்பாளிக்குள் நுழைகிறதோ அப்போது அவன் கற்பனைகள் பயன்படாமல் … திறமைகள் பயன்படுத்தப் படாமல் பாழடைந்து கிடக்கும் இடங்களில் கிழிந்து தொங்கும் சிலந்தி வலை போல ஆகிவிடும். அப்படி ஒரு நிலையில்தான் இருக்கிறது ஏ.ஆர்.முருகதாசின் “ஸ்பைடர்”..

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இதுவரை இப்படி ஒரு கேவலமான படத்தை கொடுத்தது இல்லை.
எந்த ஒரு படைப்பும் இயக்குனரின் திறமையை காட்டும் கண்ணாடி என்பார்கள். ஸ்பைடர் கண்ணாடி காட்டும் திறமை ஆழ் மன அழுக்கும், ஆணவமும், எதை எடுத்தாலும் ரசிக்க ஒரு கூட்டம், கை தட்ட ஒரு கூட்டம், பணத்தை கோடிகளில் கொட்ட ஒரு கூட்டம் என்ற மமதையை வெளிப்படுத்துகிறது.
ஸ்பைடர் படு தோல்விக்கும், மோசமான விமர்சனம் வாங்குவதற்கும் முழு காரணம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மட்டுமே.
இந்த ஆண்டின் மிக கேவலமான படம் என்ற விருது யாராவது தந்தால் அதை ஸ்பைடர் இயக்குனர் முருகதாசுக்கு தரலாம்.
சரி படத்தில் நல்ல விஷயமே இல்லை என்கிறீகளா என்றால்…

மகேஷ் பாபு… தெலுங்கு சூப்பர் ஸ்டார். தமிழில் அறிமுகம். மகேஷ் பாபுவை பொறுத்தவரை அவரின் அழகும், நடிப்பும் அருமை. தமிழ் உச்சரிப்பும் ஏற்கலாம்.
ஒரு நல்ல ஹீரோவை அழைத்து வந்து அசிங்கப் படுத்தி இருக்கிறார் முருகதாஸ்.
இயக்குனர் ஆக பிரபலம் அடைந்த எஸ் ஜே.சூர்யா இனி பிசியாகலாம். சாடிச வில்லனாக வாழ்ந்திருக்கிறார்.
சின்ன வயசு எஸ்.ஜே.சூரியாவாக நடிக்கும் அந்த பையனும் இனி அதிகம் வாய்ப்புகள் வரும். அதே நேரம் இந்த சிறுவனின் வயதுக்கு இத்தனை குரூரம் இருக்க வாய்ப்பு இல்லை. இந்த கதாபாத்திரம் இயக்குனர் ஆழ் மன அசிங்கம்.

எந்த ஒரு படத்திலும் ஒரு தொடக்கம் ஒரு முடிவு இருக்கும். அதிலும் வில்லன் தொடங்கியதை ஹீரோ முடிப்பார். இந்த ஸ்பைடர் படத்தில் வில்லன் தொடங்கியதை வில்லனே முடிக்கிறார்.
ஹீரோ ஜெயித்த சினிமாவை பார்த்த ரசிகனுக்கு வில்லன் ஜெயிக்கிற சினிமாவை நூறு கோடிக்கு மேல் செலவு செய்து சொல்கிறார் இயக்குனர்.
ஒரு இயக்குனர் தன் கற்பனையை பயன்படுத்தாமல் கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தை நம்புகிறாரோ அங்கேயே தோல்வி அடைகிறார்.
கதையும், திரைக்கதையும் ஒரு சினிமாவுக்கு உணவாக இருக்க வேண்டும்… தொழில்நுட்பம் ஊறுகாய் ஆக இருக்க வேண்டும்… ஸ்பைடர் சினிமாவில் ஊறுகாய் உணவாகவும்… உணவு கெட்டுப் போன ஊறுகாய் ஆகவும் இருக்கிறது.
ஹாரிஸ் இசையில் பாடல்கள் எல்லாம் தெலுங்கு வாசனை… பின்னணி இசையில் மரண ஓலம்… படம் பார்த்து வெளியே வரும் ரசிகன் முகம் வெளிறிய நிலையில் அதிர்ச்சியில் தான் போவான்…
இனி மெட்ரோ தூண்கள் எதை பார்த்தாலும் அதற்குள் யாராவது கொன்று புதைக்கப்பட்டிருப்பார்களோ என்ற அச்ச உணர்வு சராசரி ரசிகனுக்கு வராமல் போகாது. இப்படி இல்லாத ஒன்றை காட்சிப் படுத்தி மக்களை பீதி அடையச் செய்த காட்சிகளுக்கு சென்சார் எப்படி அனுமதி கொடுத்தது…

பரத் ஏதோ ஹீரோ ஆக நடித்து வந்தார் அவரை கூப்பிட்டு துணை நடிகர் ரேஞ்சுக்கு உயிர் பிச்சை கேட்க வைத்து இயக்குனர் திரைக்கதை சுட்டுக் கொல்லுகிறது.
ஹீரோயின் ரகூல் நடிப்பில் பெருசா ஒன்னுமில்லை. பாடல் காட்சிகளில் கிளாமர் டால்… அவ்ளோதான்.
ஆர்.ஜே.பாலாஜி ஹீரோ நண்பன். சும்மா வேஸ்ட் பன்னப்பட்டு இருக்கிறார்.
பொது மக்களின் போன் உரையாடல்களை ஒட்டு கேட்டு உதவி செய்யும் ஹீரோ. தொடர் கொலைகள் செய்யும் சாடிச சைக்கோ கொலையாளியை பிடித்தாரா… இல்லையா என்பது தான் ஸ்பைடர் கதை.

இதற்குள் ஹீரோவின் காதல், வில்லனின் பிளாஷ் பேக் எல்லாம் அடங்கி இருக்கிறது.
இது போன்ற மிக கேவலமான சினிமா தமிழில் வெளியானதில்லை என்ற பெருமையை பெற்ற படம் ஸ்பைடர்.
அதே போல படம் படு மொக்கையாக இருக்கிறது கண்டிப்பாக படு தோல்வி அடையும் என்று தெரிந்தே பல கோடிகளை கொடுத்து வாங்கி ரிலீஸ் செய்த முதல் நிறுவனம் என்ற பெருமையை லைகாவுக்கு வழங்கலாம்.
துப்பாக்கி படத்தில் பொது மக்களுக்கு வரும் ஆபத்தை ஹீரோ தேடித் தேடி போய் கண்டுபிடித்து தடுப்பார்…
ஸ்பைடர் படத்தில் பொது மக்களுக்கு ஆபத்து என்று ஹீரோவுக்கு தெரிந்தும் சரியான நேரத்துக்கு போகாமல் பொது மக்களை பலி கொடுத்து வில்லனை ஜெயிக்க வைத்து ஹீரோ மனிதாபிமானம் பேசுகிறது எப்படி இருக்கிறதென்றால் விமானம் விபத்தில் சிக்கி உயிர் தப்ப கீழே விழுபவனின் முதுகில் கட்டப்பட்ட பாராசூட் விரியாமல் போனால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது.
தெரிந்தே தான் ஸ்பைடர் என பேர் வைத்திருக்கிறார் இயக்குனர். சினிமா என்ற சுவற்றில் இயக்குனர் என்ற வலையை பலமுறை அறுந்து விழுந்தும் விடா முயற்சியால் கட்டி முடித்ததும் அதில் சிக்கும் தயாரிப்பாளர், நடிகர்களின் ரத்தம் எனும் உழைப்பை உறிஞ்சும் மிக கேவலமான சிலந்திப் பூச்சாக ஸ்பைடர் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உருவெடுத்து இருக்கிறார்.
இதே நிலை நீடித்தால்… தமிழ் சினிமாவில் காணாமல் போன இயக்குனர்கள் பட்டியலில் எண்ணிக்கை ஒன்று கூடும்.
மொத்தத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பாழடைந்து உடைந்து தொங்கும் கட்டிட இடிபாடுகளில் கிழிந்து தொங்கும் அறுந்த வலையாக “ஸ்பைடர்”
– கோடங்கி
