புதன்கிழமை, செப்டம்பர் 16
Shadow

நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்கிறேன் – நடிகர் சூர்யா

நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்கிறேன் – நடிகர் சூர்யா

நீட் தேர்வு அச்சத்தால் சமீபத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மாணவர்களின் தற்கொலைகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த நடிகர் சூர்யா, ‘ உயிருக்கு பயந்து வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என உத்தரவிடுகிறது’ என விமர்சித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, நீதிமன்றங்களை தவறாக விமர்சித்ததாக நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடந்த 13-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் அனுப்பி இருந்தார். நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அனுப்பிய கடிதம் கடந்த 14 -ம் தேதி தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்து கேட்புக்காக அனுப்பப்பட்டது.

 

இதனை ஆய்வு செய்த தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியமில்லை என கருத்து தெரிவித்துள்ளார். அரசு தலைமை வழக்கறிஞரின் கருத்தை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை என இன்று உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில், கொரோனா பேரிடர் காலத்திலும் அர்ப்பணிப்புடன் நீதிபதிகள் பணியாற்றியதாக குறிப்பிட்டுள்ள தலைமை நீதிபதி, காணொலி காட்சி மூலமாக 42,233 வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதுபோன்று அர்ப்பணிப்புடன் நீதிபதிகள் பணியாற்றிய சூழலில் நடிகர் சூர்யாவின் கருத்து நியாயமான விமர்சனமா என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளர்.

 

அரசியல் சாசனம் அளித்துள்ள பேச்சு சுதந்திரம் என்பது நியாயமான விமர்சனத்தையும் உள் அடக்கியது தான் என குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், நடிகர் சூர்யாவின் கருத்துக்களை ஆய்வு செய்த போது, பொது விவகாரங்கள் குறித்து தனி நபர் கருத்து தெரிவிக்கும் போது, குறிப்பாக நீதிமன்றங்கள், நீதிபதிகள் மற்றும் அவர்களின் பணிகளை விமர்சிக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

நியாயமான விமர்சனங்கள் நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்றாலும் கொரோனா காலத்தில் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளாமல் நடிகர் சூர்யாவின் விமர்சனம் என்பது அவசியமில்லாத ஒன்று எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அகரம் அறக்கட்டளை மூலமாக நடிகர் சூர்யா ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கி வருவதையும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

 

இதையடுத்து நீதிமன்ற உத்தரவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் சூர்யா, “நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்பதாக நடிகர் சூர்யா கூறியுள்ளார். தனக்கு இந்திய நீதித்துறையின் மீது மிகப்பெரிய அளவில் மதிப்பு இருப்பதாகக் கூறியுள்ள அவர், நாட்டு மக்களுக்கு இருக்கும் அரசியலமைப்பு உரிமையை பாதுகாக்கும் ஒரே நம்பிக்கை நீதித்துறைதான்” என்று கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன