வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

ஆளுநர் தமிழிசையின் முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்ட 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரசைவர் சிற்பம்!

ஆளுநர் தமிழிசையின் முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்ட வீரசைவர் சிற்பம்

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே அகரம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள சூரியனார் கோவிலில் வீரசைவர்கள் உயிர்த்தியாகம் செய்வது போன்ற சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் கோவில் குறித்த விரிவான ஆராய்ச்சியில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சிற்பம் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

தெலங்கானா ஆளுநர் பழமை வாய்ந்த சூரியனார் கோவில் சீரமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதை அடுத்து தொல்லியல் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலை ஆய்வு செய்தனர். கோவிலைப் பாதுகாக்க உதவுவதாக ஆளுநர் தமிழிசை உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து தொல்லியல் துறை இணை இயக்குநர் மற்றும் அதிகாரிகள் சூரியனார் கோவிலுக்குச் சென்று அதன் வரலாறு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் இந்தக் கோவில் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டது. கடவுளுக்காக உயிர்த்தியாகம் செய்யும் வழக்கம் கொண்ட வீர சைவர்களின் மரபை எடுத்துரைப்பது போல், சித்தாசனத்தில் அமர்ந்த நிலையில் தனது தலையை தானே கொய்வது போன்று இந்த சிற்பம் அமைந்துள்ளது

அரசர் போரில் தோற்கும் போதோ அல்லது பிற சிறப்புக் காரணங்களுக்காகவோ இவ்வாறு தலையை வெட்டி உயிர்த் தியாகம் செய்யும் வழக்கத்தை வீரசைவர்கள் பின்பற்றியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தெலங்கானாவில் இது வரை யதாகிரிகுட்டா, நல்லூர், வனபார்த்தி, லிங்கம்பள்ளி, வேல்கட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 வீர சைவர்களின் சிற்பங்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கோவிலில் பழங்கால எழுத்து வடிவம் கொண்ட ஒரு கல்லும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் என்ன பொறிக்கப்பட்டு இருக்கிறது என்று அறிய ஆய்வு செய்து வருகின்றனர். கோவிலின் பெரும்பகுதி சிதிலமடைந்து விட்டதால் புனரமைப்பை விட மறு சீரமைப்பே சிறந்தது என்றும் இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளதாகவும் தொல்லியல் துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு கோவிலில் இருந்து சூர்யநாராயண சுவாமியின் சிலை திருட்டு போய் விட்டதாகவும், அதைக் கண்டுபிடித்து மீண்டும் கோவிலில் சேர்க்க வேண்டும் என்றும் கோவில் பாதுகாப்பு குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கோவிலை சேதப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவிலுக்கு சொந்தமான 57.4 ஏக்கர் நிலத்தை பாதுகாக்க ஆவண செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

301 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன