
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த சோழர் காலத்து கோவிலை புனரமைக்கும் பொழுது தங்கப் புதையல் கிடைத்துள்ளது. இதனை உடனே அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் ஊர் பொதுமக்கள் அதற்கு உடன்படாததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள பழமையான சிதிலமடைந்து காணப்பட்ட குழம்பேஸ்வரர் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அப்போது கருவறை முன் உள்ள கருங்கல்லால் ஆன படிக்கட்டுகளை அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது அங்கு துணிப் பையில் சுற்றி வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் தங்க நாணயங்களை அவர்கள் கண்டெடுத்து உள்ளனர்.
பொதுமக்கள் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் தகவல் ஏதும் தராமல் மறைத்ததாகக் கூறப்படுகிறது. கோவில் இடிக்கப்பட்ட மற்றும் தங்கநகைகள் கிடைத்த தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து நகை மதிப்பீடு குறித்த தகவல்களை விசாரித்து வருகின்றனர்.

கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட நகையின் மதிப்பு சுமார் 100 சவரன் அளவிற்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. பதினாறாம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சி காலத்தில் அன்னியர் படையெடுப்பின் போது கோவில் நகைகளை பாதுகாப்பாக பல இடங்களில் மறைத்து வைத்து உள்ளதாக தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் கோவிலில் இருந்த சிலைகள் காணாமல் போனதாகவும் அவற்றை மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவலறிந்த மாவட்ட நிர்வாகம் கண்டெடுத்த நகைகளை உடனே அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஊர் பொதுமக்கள் சிலர் தங்க நகைகளை எடுத்துச் சென்று விட்டதாகவும் இன்றுக்குள் கோவில் நகைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை என்றால் காவல்துறை வீடு வீடாக சென்று எடுத்த நகைகளை மீட்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்
