வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

41 தொகுதிகளை தரும் கட்சிகளுடன்தான் கூட்டணி… இல்லை எனில், தேமுதிக தனித்து களமிறங்குமாம்!

41 தொகுதிகளை தரும் கட்சிகளுடன்தான் கூட்டணி… இல்லை எனில், தேமுதிக தனித்து களமிறங்குமாம்!

2021 சட்டமன்ற தேர்தல் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டிவரும் நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 67 மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது, சட்டமன்ற தேர்தல், கட்சிப்பணிகள், களப்பணிகள், கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதா அல்லது தனித்து போட்டியிடுவதா, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், பிரசார ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. ‘டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு ஒரு நிரந்தர முடிவு ஏற்படுத்திட முன்வர வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர், கூட்டத்தில் பிரேமலதா பேசுகையில் “2021 சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது. தேமுதிக தேர்தல் பணி இன்றே தொடங்கிவிட்டதாக எண்ணி கட்சி நிர்வாகிகள் அனைத்து தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று பணியாற்ற வேண்டும். தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு என்ன? கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதா, அல்லது தனித்து போட்டியிடுவதா என்று கேள்விகள் எழுந்துள்ளன. ஜனவரி மாதம், தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடக்க இருக்கின்றது. அந்தக் கூட்டத்தில் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து விஜயகாந்த் அறிவிப்பார்” என்றார்.

மேலும், “வயது மற்றும் உடல் சோர்வு காரணமாக விஜயகாந்த் முன்புபோல இப்போது சுறுசுறுப்பாக இல்லை. எனினும் தேர்தல் பிரசார காலத்தின் ‘கிளைமாக்சில்’ விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்வார். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விஜயகாந்தின் பிரசாரம் நிச்சயம் இருக்கும். எம்ஜிஆருக்கு பிறகு ஏழை மக்களின் வாழ்வு நலம்பெற பாடுபட்டு வருபவர், விஜயகாந்த். இதை மக்கள் புரிந்துகொண்டு தேர்தலில் அதை வெளிப்படுத்துவார்கள்.” என்று கூறினார்.

அத்துடன், “2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் மாபெரும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது தேமுதிக. அதேபோல, வர இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் 41 தொகுதிகளை தரும் கட்சிகளுடன்தான் தேமுதிக கூட்டணி அமைக்கும். இல்லை எனில், தேமுதிக தனித்து களமிறங்கும்” என்றார். பிரேமலாதாவின் இந்த கருத்தை மாவட்ட செயலாளர்கள் ஒருமனதாக ஆதரித்துள்ளனர்.

456 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன