
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்காக, கடந்த நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை எனக் கூறி, அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், கரூர் மாவட்டத்தில் திடீரென 30 ஆயிரம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், பெயர் சேர்க்க, நீக்க அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அதிமுக மாவட்ட செயலாளரான போக்குவரத்துதுறை அமைச்சரின் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரிகள், திமுகவினருக்கு வழங்கவில்லை எனவும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
இதுசம்பந்தமாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக தேர்தல் அதிகாரிக்கும் புகார் அளித்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை எனவும், தனது புகார்களை பரிசீலிக்கும்படியும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணைய விதிகளின்படி மேற்கொள்ள உத்தரவிடவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, வாக்காளர் இறுதிப் பட்டியல் ஜனவரி 15 ம் தேதி வெளியிட உள்ள நிலையில் தற்போது முன் கூட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

