
தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் மூச்சுத்திணறல் காரணமாகத் திருச்சி மாருதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுத் தலைவராக உள்ளார். அவரது தலைமையில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வுக்கூட்டம் திருச்சியில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கணக்குக் குழு ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர், திருச்சி கட்டுமானப்பணி, மத்தியச் சிறை, வேளாண் கல்லூரி உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று நடந்த சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்திற்குப் பின்னர், துரைமுருகன் மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் மாலை சென்னை செல்வதாகத் திட்டமிட்டிருந்தார். ஆனால், திண்டுக்கல்லில் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது
காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவசர அவசரமாகத் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டார். திருச்சி மாருதி மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உடல் பரிசோதனை நடைபெற்றது. துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலறிந்த தி.மு.க வினர், மருத்துவமனை முன்பு திரண்டனர்.
”பொதுக்கணக்கு ஆய்வுக் குழு கூட்டத்திற்கு வந்தார். அப்போது வரும் முன்பே விட்டு விட்டுக் காய்ச்சல் அடித்துக்கொண்டிருந்தது. அதனைப் பொருட்படுத்தால் கூட்டத்தில் கலந்துக்கொண்டுவிட்டு திண்டுக்கல்லில் நடைப்பெற்றும் கூட்டைத்தை முடித்துவிட்டு கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருக்கிறார்.
அங்குக் கடுமையான குளிரால் காய்ச்சல் அதிகமானது. காய்ச்சலை வைத்துக்கொண்டு இங்கு இருந்தால் சரியாக இருக்காது என்று திண்டுக்கல் டு திருச்சி வழியாக வந்து கொண்டிருந்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அவசர அவசரமாகத் திருச்சி மாருதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சி.டி ஸ்கேன் மற்றும் கொரோனா டெஸ்ட் எடுத்துள்ளனர். அதில் நெகட்டிவ் என்று வந்தவுடன் ஊசி போட்டுக்கொண்டு சாலை வழியாகச் சென்னைக்குக் கிளம்பி விட்டார். அவர் கூடவே ஒரு மருத்துவரும் செல்கிறார்.அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்றனர்
