
பிரசாத் ஸ்டுடியோவிற்கு செல்ல இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
சென்னையில் இருக்கும் பிரசாத் ஸ்டுடியோவின் நிர்வாகத்திற்கும், இசையமைப்பாளர் இளையராஜாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் அளவிற்கு சென்றது. பிரசாத் ஸ்டுடியோவிற்குள் செல்ல தன்னை அனுமதியளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், திரைப்படங்களுக்காக கைப்பட எழுதிய இசைக் கோப்புகள், இசைக் கருவிகள் மற்றும் விருதுகள் உள்ளிட்டவற்றை இருப்பதாகவும், அவற்றை எடுத்துக் கொள்ளவும், தியானம் செய்யவும் அனுமதி வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது, பிரசாத் ஸ்டுடியோவை உரிமைக் கோரக்கூடாது என்றும், தங்கள் மீது தொடரப்பட்ட ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கோரிய வழக்கை திரும்பப் பெற வேண்டும் என பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட இளையராஜாவும் வழக்கை வாபஸ் பெற்றதுடன், ஸ்டுடியோவை உரிமை கோர மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, பிரசாத் ஸ்டுடியோவிற்க்குள் செல்ல இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரசாத் ஸ்டுடியோவிற்குள் இளையராஜா இருக்கலாம் என்றும், இளையராஜாவையும் அவருடன், நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் வழக்கறிஞர் ஆணையர், இருதரப்பு வழக்கறிஞர்கள் மட்டுமே செல்ல வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
