
திமுகவின் கதவுகள் அடைக்கப்பட, ரஜினிகாந்தும் கட்சி தொடங்கப்போவதில்லை என்பதால் பாமக தனித்துவிடப்படும் நிலை
பாமக சிறப்புப் பொதுக்குழுவில் அதிமுகவுடன் கூட்டணி சேருவதைத் தவிர வேறு முடிவுகள் விவாதிக்கப்பட வாய்ப்பில்லை என்றும், தொகுதி பேரத்தை அதிகப்படுத்த தனித்துப்போட்டி என்று சில மிரட்டல் பேச்சுக்கள் மட்டும் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே, திமுகவின் கதவுகள் பாமகவுக்கு அடைக்கப்பட்டுவிட்டது. நடிகர் ரஜினிகாந்தும் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்பதால் 2021 சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி அமைக்கும் வாய்ப்பும் தமிழக அரசியல் களத்தில் இல்லை. இந்த நிலையில் அதிமுக அணியில் சேருவதைத் தவிர பாமகவுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை.
சிறப்புப் பொதுக்குழுவில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்பட வாய்ப்பு இல்லையென்றும் கூட்டணிப் பேச்சுகளை நடத்த பாமக தலைவர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதன்முதலாக 1991-ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் குதித்த பாமக ஒரேயொரு தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றது. அதைத்தொடர்ந்து, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் வென்றது. அதற்குப் பின் 1998-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டு, மத்திய பாஜக அமைச்சரவையில் இடம்பிடித்தது. அடுத்து 1999-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் சேர்ந்து மீண்டும் பாஜக அமைச்சரவையில் சேர்ந்தது

அடுத்த 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பாமக, 2004 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்தது. அடுத்து 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கைகோர்த்த பாமக, அடுத்து 2009 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் மீண்டும் இணைந்தது. அந்தத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த பாமக மீண்டும், 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தது. இந்தத் தேர்தலிலும் தோற்றது
அதிமுக, திமுக என்று மாறிமாறிக் கூட்டணை வைத்ததாலும், மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற ராமதாஸ் மகன் அன்புமணி, வன்னியர்களுக்கு எதுவும் செய்யாததாலும், வன்னியர் ஆதரவை பாமக இழக்கத் தொடங்கியது. இதனால்தான், 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2011 சட்டமன்றத் தேர்தலிலும் பெரும் தோல்வியை பாமக தழுவியது என்று கூறப்பட்டதால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக தலைமையிலான பாஜக கூட்டணியில் சேர்ந்தது.
தொடர்ந்து, 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாமக வன்னியர் கட்சி அல்ல என்ற முழக்கத்துடன் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து களங்கண்ட பாமக அனைத்து தொகுதிகளிலும் தோற்றது. இதனால், மீண்டும் கூட்டணி அரசியலுக்குத் திரும்பிய பாமக, 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் அணி சேர்ந்தது. ஆனால், அன்புமணி உள்ளிட்ட பாமக வேட்பாளர்கள் அனைவரும் தோற்றுப்போனதால், வன்னியர் ஆதரவு முழக்கத்தை மீண்டும் கையில் எடுத்த பாமக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வேண்டும் என்று போராடிவருகிறது. இதற்கு, ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தேவை என்பதால், அதற்கான ஆணையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார்
இந்த ஆணையத்தை ஏற்காத பாமக தலைவர், தற்போதுள்ள கணக்கின்படியே வன்னியர்களுக்கு உடனடியாக 20 சதவீத ஒதுக்கீடு செய்யலாம் என்று கோரினார். மேலும், அன்புமணி ராமதாசை கூட்டணியின் துணைமுதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும், 80 முதல் 100 தொகுதிகள் வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுவருகிறார்.
அதிலும், குறிப்பாக பாமக வலிமையாக இருக்கும் அனைத்து தொகுதிகளையும் அவர் கேட்பதால், பாமகவுடன் அணி சேருவதால் அதிமுகவுக்கு என்ன லாபம் என்றும் கேட்கப்படுகிறது.
2021 தேர்தலில் கூட்டணி சேருவதற்கு மாநில ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையையும், அன்புமணிக்குத் துணை முதல்வர் பதவி தரவேண்டும் என்பதையும் பாமக வலியுறுத்திவருகிறது. இல்லையென்றால், பாமகவையும் பாஜகவையும் இணைத்து மூன்றாவது அணி அமைக்கலாம் என்று ராமதாஸ் திட்டமிட்டுவந்தார். அதே நேரம் வன்னியருக்கு 20 சதவீத ஒதுக்கீடுப் போராட்டத்தையும் போனமாதமே அவர் அறிவித்தார். பல்வேறு நடவடிக்கைகளால் அதிமுகவை வழிக்குக்கொண்டுவரும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார்.
ஆனால், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்காததால் பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், பாஜகவுடன் அணி சேர்ந்து மூன்றாவது அணி அமைக்கும் திட்டத்துகான வாய்ப்புகள் இல்லை. திமுக கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் கட்சிகளுக்கே போதிய இடங்கள் இல்லாத நிலையில், அந்தக் கூட்டணியில் சேர முடியாது. மூன்றாவது அணியும் அமைக்க முடியாது. அதிமுகவுக்கு பெரும் நெருக்கடி கொடுத்து, அந்த அணியில் இடம் பெற முடியாவிட்டால், பாமக தனித்துவிடப்படும் நிலைதான் ஏற்படும் என்று கருதப்படுகிறது. இதனால், அன்புமணிக்குத் துணை முதல்வர் என்ற கோரிக்கைகையும், ஆட்சியில் பங்கு என்னும் கோரிக்கையையும் கைவிடுவதைத் தவிர பாமகவுக்கு வேறு வழியில்லை என்று தெரிகிறது
