
சர்வதேச சர்ச்சையில் சிக்கிய தடகள வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது!
விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து சினிமா எடுப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி மேரி கோம், மில்கா சிங், தோனி குறித்து வெளியான படங்கள் வசூலில் சாதனை படைத்தன. சச்சின் படமும் வெளியானது. தற்போது கிரிக்கெட் வீரர் கபில் தேவ், பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவல், பிவி சிந்து, கிரிக்கெட் வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோரது படங்களும் தயாராகி வருகின்றன.
அந்த வகையில், தமிழகத்தை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன் வாழ்க்கை சினிமா படமாகிறது. இவர் இந்தியாவுக்கு 12 சர்வதேச பதக்கங்களையும், தமிழகத்திற்கு 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் பெற்று கொடுத்துள்ளார். ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் ஆவார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடத்தப்பட்ட பாலின சோதனை அறிக்கை அடிப்படையில், அவருக்கு பெண்களுக்கான போட்டியில் தகுதி மறுக்கப்பட்டு, அவர் வென்ற வெண்கலப் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது. தடகளப் போட்டிகளில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டார்.
இவ்வாறு சாந்தி சவுந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த திருப்பங்கள் நிறைந்த சம்பவங்களை மையமாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டு அவரிடம் ஒப்புதல் பெற்று இந்த படம் தயாராவதாக படத்தின் இயக்குனர் ஜெயசீலன் தவப்புதல்வி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் சாந்தி சவுந்தரராஜன் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை நடிக்கிறார்.
ஜிப்ரான் இசையமைக்கிறார். ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்கிறார். புதுக்கோட்டை அருகே உள்ள சாந்தி சவுந்தரராஜனின் கிராமத்தில் படப்பிடிப்பை தொடங்கி பஞ்சாப், கத்தார். ஓமன் ஆகிய இடங்களில் நடத்துகின்றனர்.
339 Views
