
துரோகமிழைத்த வாசன் ராஜினாமா செய்த த.மா.கா துணை தலைவர் கோவை தங்கம்!
வாசன் துரோகமிழைத்து விட்டதால் எல்லா பதவிகளையும் ராஜினாமா செய்கிறேன் என த.மா.கா துணை தலைவர் கோவை தங்கம் அறிவித்திருப்பது அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கோவை தங்கம், “நான் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக பல போராட்டங்களை நடத்தி ஊதிய உயர்வு பெற்று தந்துள்ளேன். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் சேர என்னைப் போன்றவர்களுக்கு உடன்பாடு இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதிமுகவுடனான கூட்டணியில் ஒரு தொகுதி பெற எதிர்ப்பு தெரிவித்தேன். 6 தொகுதியை வாங்க வேண்டாம். சுயேச்சையாக சைக்கிள் சின்னத்தில் 12 தொகுதிகளில் போட்டியிடலாம் என வாசனிடம் கூறினேன்.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டாம் எனவும் தெரிவித்தேன். ஆனால் வாசன் என்னை கைவிட்டு, எனக்கு எதிராக துரோகம் செய்துவிட்டார். காங்கிரஸில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸில் சேர்ந்ததற்காக மிகவும் வருத்தப்படுகிறேன். வாசன் துரோகமிழைத்து விட்டதால் அடிப்படை உறுப்பினர் துணை தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுகிறேன். என்னுடன் தமாகா நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்கின்றனர். வால்பாறை தொகுதியை எனக்கு ஒதுக்காததற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான் காரணம்” எனக் குற்றஞ்சாட்டினார்.

2016 ஏப்ரல் 6ம் அளித்த பேட்டியில் “எங்களை வளர்த்து ஆளாக்கியது மூப்பனார் தான். என் உயிர் இருக்கும் வரை அவரது குடும்பத்துக்கு விசுவாசமாக இருப்பேன். ஜி.கே.வாசனுக்காக உயிரையும் கொடுப்பேன். எனது ஒவ்வொரு துளி ரத்தமும் ஜி.கே.வாசனுக்காகத் தான் போகும். கூட்டணி தொடர்பாக தலைவர் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவேன்” என கூறியதும் இதே கோவை தங்கம்!
