புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

ஆட்சி காலத்தில் செய்ததை பட்டியல் போட்டு சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமி  தயாராக இருக்கிறாரா?  – ஸ்டாலின் கேள்வி

ஆட்சி காலத்தில் இதை எல்லாம் செய்திருக்கிறோம் என்று பட்டியல் போட்டு சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமி  தயாராக இருக்கிறாரா?  – ஸ்டாலின் கேள்வி

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கும்மிடிப்பூண்டியில் இன்று காலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் தேர்தல் நேரத்தில் மட்டும் வர மாட்டேன். எப்போதும் உங்கள் கூடவே இருப்பேன். உங்களுடைய சுக துக்க நிகழ்ச்சியில் உரிமையோடு கலந்து கொள்ளக்கூடியவன் என்பது உங்களுக்கு தெரியும்.

அந்த உரிமையுடன் உங்களிடம் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். நான் 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றை பெற்றிருப்பது உங்களுக்கு தெரியும். 13 வயதில் திருவாரூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் பயின்ற போதே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞரின் மகன்தான் நான்.

தி.மு.க.வின் சாதாரண தொண்டனாக 14 வயதில் என்னை இணைத்துக் கொண்டேன். இளைஞர் அணியை ஏற்படுத்தினேன். அதன்பிறகு வட்டபிரதிநிதியாக, மாவட்ட பிரதிநிதியாக, பொதுக்குழு உறுப்பினராக, செயற்குழு உறுப்பினராக, இளைஞர் அணி செயலாளராக, துணை பொதுச்செயலாளராக , பொருளாளராக, செயல் தலைவராக இருந்து இன்று தி.மு.க. தலைவராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.

மக்கள் பணியாற்றுவதில் சட்டமன்ற உறுப்பினராக, சென்னை மாநகர மேயராக, உள்ளாட்சி துறை அமைச்சராக, துணை முதல்-அமைச்சராக, இன்று எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறேன்.

இப்போது முதல்-அமைச்சர் வேட்பாளராக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். தமிழக மக்களின் கண்களை திறந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்று பெரியார் சொல்லி இருக்கிறார். அந்த மக்களை நடக்க வைத்தவர் கலைஞர் என்றும் பெரியார் சொல்லி இருக்கிறார்.

கலைஞர் 5 முறை ஆட்சி பொறுப்பில் இருந்த போது எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அந்த பெயரை சூட்டினார். அவர்களுக்காக ஒரு நல வாரியத்தை ஏற்படுத்தி கொடுத்தார். திருநங்கைகளுக்கு நலவாரியத்தை உருவாக்கினார். கிராமங்களில் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம் ஏற்படுத்தி கொடுத்தார்.

அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ பெரியார் பெயரில் சமத்துவபுரத்தை ஏற்படுத்தினார். குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கினார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை ஏற்படுத்தி கொடுத்தார்.

கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பெண்கள் சொந்தகாலில் நிற்க சுயஉதவி குழுக்களையும் உருவாக்கினார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்களுக்கு திருமண உதவித்தொகை கலைஞர் ஆட்சியில் தான் வழங்கப்பட்டது. மினி பஸ், உழவர் சந்தை, புதிய பட்டதாரிகளுக்கு உதவிகள், சலுகைகள், பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் ஆகியவற்றையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

ஒரு தாய் பிள்ளையை கவனிப்பது போல கலைஞர் தமிழக மக்களுக்காக அனைத்து திட்டங்களையும் செய்துகொடுத்துள்ளார். இப்போது 10 வருடமாக எதிர்க்கட்சியாக இருக்கிறோம். கலைஞர் 5 முறை ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது செய்தவற்றை பட்டியல் போட்டு சொல்லி இருக்கிறேன்.

ஆனால் இப்போது ஆட்சியில் இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி எங்கள் ஆட்சி காலத்தில் இதை எல்லாம் செய்திருக்கிறோம் என்று பட்டியல் போட்டு சொல்வதற்கு அவர் தயாராக இருக்கிறாரா? என்ற கேள்வியை நான் இந்த கூட்டத்தின் மூலமாக கேட்டுக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.

ஆளுங்கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். தி.மு.க. வெளியிட்ட அறிக்கையை அப்படியே காப்பியடித்து வெளியிட்டு இருக்கிறார்கள். பல திட்டங்களை பொய்யாக கூறி இருக்கிறார்கள்.

செய்யமுடியாத காரியங்களை எல்லாம் சொல்லி இருக்கிறார்கள். வாய்க்கு வந்தபடி பல உறுதிமொழிகளையும் சொல்லி இருக்கிறார்கள். எது நடக்கும்? எது நடக்காது என்று மக்களுக்கு தெரியும். இப்போது இந்த சட்டமன்ற தேர்தலுக்காக வாக்குறுதிகளை சொல்லி இருக்கிறீர்கள்.

360 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன