
ஜெயலலிதா டிச.5-க்கு முன்பே அக்டோபர் மாதமே மரணமடைந்துவிட்டார், அவரது கைரேகை அவர் மரணமடைந்த பின்னரே எடுக்கப்பட்டது. ஆகவே அதில் நீரோட்டம் இல்லை என திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகசாமியிடம் புகார் அளித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிச.5 அன்று மரணம்டைந்தார். அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஜெ.தீபா, ஓபிஎஸ் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர்கள் பலர் புகார் அளித்திருந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
அவர் விசாரணையை தொடங்கி உள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்த ஆவணங்களை நேரிலோ, பதிவு தபாலிலோ தன்னிடம் அளிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று ஜெ.தீபாவின் கணவர் மாதவன் சில ஆவணங்களை ஆறுமுகசாமியிடம் அளித்தார். திருப்பரங்குன்ற இடைதேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போன திமுக வேட்பாளர் டாக்டர்.சரவணன் இன்று நீதிபதி ஆறுமுகசாமி முன் ஆஜராகி சில ஆவணங்களை அளித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
”ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து எழுந்துள்ள சந்தேகங்களைப் புகாராக அளித்துள்ளோம். முரண்பட்ட தகவல்களை அளித்துள்ளனர். செப்.22 ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா காய்ச்சலுக்காக, நீர்ச்சத்துக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அறிக்கை வெளியானது. ஆனால் தற்போது வெளிவந்த அவரது டிஸ்சார்ஜ் அறிக்கையில் செமிகான்சியஸ், மயக்கமடைந்த நிலையில் 48 சதவிகித ஆக்சிஜன் ஸ்டேட்டஸில் அனுமதிக்கப்பட்டதாக கூறியுள்ளனர். இது மாதிரியுள்ள முரண்பட்ட தகவல்களை குறிப்பிட்டுள்ளோம்.
ஆளுநர் மாளிகையில் இருந்து முதன்மை செயலாளர் அளித்த அறிக்கையிலும், சிகிச்சையில் அவர்கள் இருந்த உடல் நிலைக்கும் பெரிய அளவுக்கு வித்தியாசம் உள்ளது. இந்த முரண்பாடுகளை சமர்ப்பித்துள்ளோம். மேற்கொண்டு முக்கியமான ஆவணங்களை சமர்ப்பிக்க உள்ளோம், விசாரணை நாளையும் தொடரும்.
இன்று முதல் கட்ட விசாரணையில் சிகிச்சை குறித்த சந்தேகங்களை கேட்டுத் தெரிந்துகொண்டார். படிவம் A இடைதேர்தலின் போது ஜெயலலிதா கைரேகை வைத்ததாக கூறப்பட்ட படிவம். இதில் நான்கு இடங்களில் கைரேகையும், படிவம் B-யில் ஒரு இடத்திலும் கைரேகை வைத்துள்ளார்.
சாதாரணமாக ஒருவர் கைரேகையில் வரிவரியாக தெரியும். உயிரோட்டம் இருக்கும், உயிரோடு இருப்பவர் கைரேகையில் வரி வரியாக உயிரோட்டம் இருக்கும். ஆனால் ஜெயலலிதா கைரேகையில் அந்த வரிகள் இல்லை. உயிரோட்டம் இல்லாமல் இருந்தால் வரிகள் தெரியாது.
கைரேகைக்கு சில முறைகள் 10 அம்சங்கள் உள்ளது. அதில் அவரது கைரேகை எதுவும் ஒத்துவரவில்லை. வரி வரியாக கோடுகள் தெரியவில்லை.”
இவ்வாறு சரவணன் தெரிவித்தார்.
