ஓடிடி-யில் வெளியாகவுள்ள மணிரத்னத்தின் 26 படங்கள்!
இயக்குனர் மணிரத்னம் தமிழில் ‘பகல் நிலவு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் ‘மௌன ராகம்’, ‘நாயகன்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘தளபதி’, ‘ரோஜா’, ‘பம்பாய்’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.
இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 26 படங்கள் டிஜிட்டலில் மாற்றப்பட உள்ளதாம். இதற்கான பணிகள் சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த 26 படங்களும் டிஜிட்டலில் மாற்றப்பட்ட பின் வரிசையாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்தில், கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

