
நடிகர் சசிகுமாரின் உறவினர் அஷோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர் என புகாரளிக்கப்பட்ட நிலையில் பைனான்ஸியர் அன்புச்செழியனை கைது செய்ய சென்னை தனிப்படை போலீஸார் மதுரை விரைய உள்ளனர்.
நடிகர், இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சென்னை வளசரவாக்கத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன்னர் தன்னுடைய தற்கொலைக்கு காரணம் கந்து வட்டித்தான் என்றும் பைனான்சியர் அன்புச்செழியனின் மிரட்டல் காரணமாகவே தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் அசோக்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக பைனான்சியர் அன்புச்செழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சசிகுமார் அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீஸார் அன்புச்செழியன் மீது பிரிவு 306 (தற்கொலைக்கு தூண்டியது) வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் அன்புச்செழியனை கைது செய்ய சென்னை போலீஸார் முனைப்பு காட்டி வருகின்றனர் இன்று சென்னையிலிருந்து தனிப்படை போலீஸார் மதுரை செல்ல உள்ளனர். அன்புச்செழியன் தற்போது தலைமறைவாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அன்புச்செழியன் ஏற்கனவே தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன் தற்கொலையுடன் இணைத்து சர்ச்சைக்குள்ளானவர். ஆனால் அப்போது அவர் கைது செய்யப்படவில்லை.
ஆனால் 2011-ம் ஆண்டு, யுவஸ்ரீ கிரியேஷன்ஸ், யுவஸ்ரீ பிக்சர்ஸ் ஆகிய சினிமா தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வந்த சுந்தரா டிராவல்ஸ், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களை தயாரித்த தங்கராசு என்பவர் தன்னிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய புகாரின் கீழ் அப்போதைய மதுரை ஆணையர் அஸ்ரா கார்க்கினால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
