
நான் கடவுள்’ நேரத்தில் இந்த அன்புசெழியனால் அஜித் சாரும் அசோக் அண்ணன் மனநிலைக்கு ஆளானார் என்று இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்திருக்கிறார்.
திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்த அசோக் குமார் நேற்று (செவ்வாய்க்கிழமை) தற்கொலை செய்து கொண்டார். கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். அசோக்குமார் தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அசோக்குமார் தற்கொலை குறித்து பைனான்சியர் அன்புசெழியனை கடுமையாக குற்றச்சாட்டி இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் இயக்குநர் சுசீந்திரன் கூறியிருப்பதாவது:
அனைவருக்கும் வணக்கம், அசோக் அண்ணனின் மரணம் தமிழ் சினிமாவில் கடைசி மரணமாக இருக்க வேண்டும். அஜித் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவலை தெரிவித்துக் கொள்கிறேன். ‘நான் கடவுள்’ நேரத்தில் இந்த அன்பு செழியனால் அஜித் சாரும் அசோக் அண்ணன் மனநிலைக்கு ஆளானார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்கள் லிங்குசாமி சார், கவுதம் மேனன் சார், தயாரிப்பாளர்கள் முக்கால்வாசி பேர், பல நடிகர்களும் இந்த அன்புசெழியனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏன் இசையமைப்பாளர் இமானிடமும் கூட எந்தப் படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்று மறைமுகமாக சிரித்துக் கொண்டே கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் இந்த அவலநிலைக்கு காரணமான அன்புசெழியன் தண்டிக்கப்பட வேண்டும். மத்திய அரசுக்கும், வருவாய்த்துறைக்கும் ஒரு வேண்டுகோள். தமிழ்நாட்டின் பாதிபணம் அன்புவிடம் இருக்கும். தயவு செய்து அவர் வீட்டிலும் ரெய்டு செல்லவும்
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
