செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

மக்கள் நீதி மய்ய கூடாரம் காலி! முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா!!

 

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அக்கட்சியில் துணைத் தலைவர் பதவி வகித்து வந்த மகேந்திரன் மற்றும் குமரவேல், மவுரியா, முருகானந்தம், சந்தோஷ்பாபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகியுள்ளனர்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. ஒரு தொகுதியில் கூட மக்கள் நீதி மய்யம் வெற்றி பெறவில்லை. கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தோல்வியை தழுவினார்.

அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சியில் பெரிய மாற்றம் செய்ய இருப்பதாகவும், அது கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகளான மகேந்திரன், பொன்ராஜ், மவுரியா உள்ளிட்ட 10 நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்

இந்நிலையில் மகேந்திரன் வெளியிட்டுள்ள ராஜினாமா கடிதத்தில், நான் கனத்த இதயத்துடனும், தெளிவான சிந்தனையுடனும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து உடனடியாக இன்றிலிருந்து விலகுகிறேன்

இப்படிப்பட்ட ஒரு கடினமான முடிவினை நான் இன்று எடுப்பதற்கான காரணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் அனைவருக்கும் தெரிவிப்பது எனது முக்கியமான கடமையும் பொறுப்பும் ஆகும்.

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகுவது என்கின்ற கடினமான முடிவினை மிகக் கவனமாக எடுத்திருக்கின்றேன். கட்சியின் இத்தனை பெரிய தோல்விக்குப் பிறகும், தனது தோல்விக்குப் பின்னரும், கமல்ஹாசன் தனது அணுகுமுறையில் இருந்து மாறுபட்டு செயல்படுவதாக எனக்குத் தெரியவில்லை. மாறிவிடுவார் என்ற நம்பிக்கையும் இல்லை

எனக்குத் தெரிந்த கமல்ஹாசன், கொள்கைக்காகவும், எளிய தொண்டர்களுக்கு தோழனாகவும், அனைத்து நல்ல தலைமைப் பண்புகளையும் கொண்ட நம்மவராக மறுபடியும் செயல்பட வேண்டும் என்று வெளியே இருந்து வாழ்த்துகின்றேன்.

கமல்ஹாசனால் நான் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்திருந்தாலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் உற்காசகமும் உத்வேகமும் தான் என்னை இந்த இரண்டரை ஆண்டுகளில் இரண்டு முக்கியமான தேர்தல்களை சந்திப்பதற்கான வலிமையைக் கொடுத்தது. அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்

அரசியல் எனும் விதையை, எனக்குள் விதைத்த கமல்ஹாசனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். மக்கள் சேவையை எங்கிருந்து செய்தாலும், காந்தி சொன்னதுபோல, நீங்கள் விரும்பும் மாற்றமாக இருங்கள் என்பதற்கேற்ப சிறப்பாகவும், அறத்துடனும் செயல்படுவேன் என்ற உறுதியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விடை பெறுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்

இவரைத் தொடர்ந்து குமரவேல், மவுரியா, முருகானந்தம், சந்தோஷ்பாபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகியுள்ளனர்.

 

 

585 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன