
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் விட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றிருக்கும் திமுக, புதிய ஆட்சியை அமைத்துள்ளது. இதையடுத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தார் கலந்து கொண்டனர். அப்போது ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி மு.க.ஸ்டாலின் முதலமைச்சருக்கான பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக்கொண்டார். ஸ்டாலின் உறுதிமொழியை ஏற்ற போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்தக் கண்ணீர் விட்டார். யாரும் கவனிக்காவண்ணம் அவர் கண்களை துடைத்துக் கொண்டார். உதயநிதி ஸ்டாலினும் கண்கலங்கினார்.

