திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சம்- 35 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100!

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சம்- 35 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100!

பெட்ரோல்-டீசல் விலை நாடு முழுவதும் கடுமையாக உயர்ந்துள்ளது.

நாட்டின் பெட்ரோலிய தேவைகளுக்கு இந்தியா இறக்குமதியையே நம்பியுள்ளது. அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக நமது நாடு உள்ளது. மொத்த தேவையில் 82 சதவீதம் அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.

கடந்த ஒரு ஆண்டாக கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் கச்சா எண்ணெயின் விலை (ஒரு பேரல்) ரூ.2,800ஆக இருந்தது. இது தற்போது பல மடங்கு உயர்ந்து ரூ.5,021ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் மத்திய- மாநில அரசுகளும் பெட்ரோல்- டீசல் மீது வரியை விதிக்கின்றன. இந்த 2 காரணங்களாலும் பெட்ரோல்- டீசல் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து இருக்கிறது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பே 100-ஐ கடந்து இருந்தது. இந்த நிலையில் தமிழகத்திலும் தற்போது சென்னை, திருவள்ளூர், திருச்சி ஆகிய 3 மாவட்டங்களை தவிர 35 மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை 100-ஐ தாண்டி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று ரூ.99.53-க்கு விற்பனையானது. திருவள்ளூரில் இதன் விலை ரூ.99.81ஆக உள்ளது. திருச்சியில் பெட்ரோல் விலை 99.94ஆகவும்  இந்த 3 மாவட்டங்களிலும் அடுத்த சில தினங்களில் பெட்ரோல் விலை 100-ஐ தொடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று பெட்ரோல் விலை 100-ஐ கடந்துள்ள 34 மாவட்டங்கள் மற்றும் விலை நிலவரம் வருமாறு:-

1. அரியலூர்-100.13

2. கோவை-102.83

3. கடலூர்-101.43

4. தர்மபுரி-100.68

5. திண்டுக்கல்-100.39

6. ஈரோடு-100.08

7. கள்ளக்குறிச்சி-101.44

8. காஞ்சிபுரம்-100.21

9. கன்னியாகுமரி-100.13

10. கரூர்-100.07

11. கிருஷ்ணகிரி-100

12. மதுரை-100.06

13. நாகப்பட்டினம்-100.22

14. நாமக்கல்-100.20

15. நீலகிரி-101.47

16. பெரம்பலூர்-100.04

17. புதுக்கோட்டை-100.04

18. ராமநாதபுரம்-100.08

19. ராணிப்பேட்டை-100.50

20. சேலம்-100.33

21. சிவகங்கை-100.59

22. தென்காசி-100.20

23. தஞ்சாவூர்-100

24. தேனி-100.64

25. திருப்பத்தூர்-101.46

26. திருவண்ணாமலை- 100.80

27. திருவாரூர்-100

28. தூத்துக்குடி-100.22

29. திருப்பூர்-100.09

30. வேலூர்-100.37

31. விழுப்புரம்-101.05

32. விருதுநகர்-100.84

33. மயிலாடுதுறை-100

34. செங்கல்பட்டு-100

35. நெல்லை-100.11

பெட்ரோல் விலையுடன் டீசல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. டீசல் விலையும் பல்வேறு மாவட்டங்களில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.95 அளவுக்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக லாரி, ஆட்டோ, வாடகை கார் கட்டணங்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இன்று மோட்டார் சைக்கிளையே பயன்படுத்துகிறார்கள். பலர் தினமும் வேலைக்கு அதிலேயே சென்று வருகிறார்கள்.

பெட்ரோல் விலை காரணமாக பலர் மோட்டார் சைக்கிள்களை ஓரம் கட்டி விட்டு பஸ், ரெயில்களில் பயணம் செய்வதும் அதிகரித்துள்ளது. நாளை முதல் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பலர் அதில் பயணம் செய்து வேலைகளுக்கு செல்வதற்கும் ஆர்வமாக உள்ளனர்.

பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று அனைத்து கட்சியினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் அதனை குறைப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமலேயே உள்ளனர்.

பெட்ரோல்-டீசலுக்கு மத்திய, மாநில அரசுகள் அதிகளவில் வரி விதிக்கின்றன. பெட்ரோல் விலையில் 58 சதவீதமும், டீசல் விலையில் 22 சதவீதமும் வரியாகவே உள்ளது. மத்திய அரசுக்கு 2020-2021-ம் நிதி ஆண்டு பெட்ரோல்-டீசல் வரி விதிப்பு மூலமாக 5 லட்சம் கோடி வருமானம் கிடைத்துள்ளது.

மாநில அரசுகளுக்கும் பெட்ரோல்-டீசல் வரி மூலமாக குறிப்பிட்ட அளவுக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த வரியை குறைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. எனவே வருங்காலங்களில் வரி குறையுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வது தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திரபிரதான் கூறும்போது, “விலை உயர்வுக்கு மன்மோகன்சிங் அரசே காரணம். காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட எண்ணெய் கடன் பத்திரத்திட்டத்தாலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மறுத்துள்ளன. மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை கடந்த ஆண்டு உயர்த்தியதே பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்று குற்றம் சாட்டி இருக்கின்றனர்.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே மத்திய-மாநில அரசுகள் பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதன்மூலம் பெட்ரோல்- டீசல் விலை ஓரளவு குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும், இதனால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சுமை வெகுவாக குறையும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

333 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன