கோடங்கி சொல்லும்
11 கோடியில் உருவான
வாழைப்பழ கிளைமாக்ஸ்..!
முக்கிய குறிப்பு: இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையானது…
நிஜமானதாக நீங்கள் நினைத்தால் கம்பெனி… பொறுப்பு இல்லை…

நல்ல கதை வேண்டுமே என்று ஆபீசில் மண்டையை உடைத்துக் கொண்டிருந்த
தயாரிப்பாளருக்கு கதவு தட்டப்படும் சத்தம் கேட்க…
யெஸ் கம்மின்…
உள்ளே வந்து நின்றான் ஒரு வாலிபன் கையில் ஒரு பைல்… பார்த்த உடனே
ஏதோ கதை சொல்ல வந்தது தெரிந்து விட்டது…
கதை சொல்ல வந்தவர்: சார் சதுரங்கவேட்டை டைப்ல ஒரு கதை தேடுறீங்கன்னு சொன்னாங்க…
எங்கிட்ட ஒரு கதையிருக்கு சொல்லவா சார்…
தயாரிப்பாளர்: ம்…
இது ஒரு சினிமா சீட்டிங் கதை சார்…
தயாரிப்பாளர்: யோவ்… சினிமாவே ஒரு சீட்டிங்தான்… அதுல என்னய்யா… சரி மேல சொல்லு…
கதை சொல்ல வந்தவர்: சினிமாவையே தன் கட்டுப்பாட்டுல வைச்சிருக்கிற பெரிய பைனான்சியர்…
ஒரு டைரக்டர்… ஒரு தயாரிப்பாளர் இவங்களை சுத்தி நடக்குற கதைதான்சார் இது…

அந்த தயாரிப்பாளருக்கு முதல் படத்துல இருந்தே இந்த பைனான்சியர் பழக்கம் இருந்தாலும்
அப்ப எல்லாம் வாங்குன பணத்தை சரியா குடுத்துடுறாரு…
அந்த படம் எடுக்கும்போது பணமுடையாகிப்போச்சி…
அப்ப நம்ம பைனான்சியர் முகம் பளீச்னு மூளைக்குள்ள
பல்பு எரிய நேரா ஆபீஸ் வந்துடுறாரு…
அவரும் வேற எதையும் பேசிக்காம தயாரிப்பாளர்
கேட்ட பணத்தை குடுத்து அனுப்பிடுறாரு…
யாருக்குமே சொல்லாம நம்ம தயாரிப்பாளர்
அந்த பணத்தை வாங்கிட்டு சத்தமில்லாம போறாரு… சார்…
தயாரிப்பாளர் குறுக்கிட்டு: யோவ்… என்னய்யா… இது சினிமா எடுக்குற எல்லாருக்கும்
தொடங்கும்போதுதான் பணம் கையில இருக்கும் பத்துநாள் ஆனாலே
பண முடையாகிடும் பைனான்சியர் தேடி ஓடுவோம் இதுல என்னய்யா த்ரில் இருக்கு…
கதை சவசவன்னு இருக்குய்யா… என்று கடுப்படிக்கிறார்…
கதை சொல்ல வந்தவர்: சார்… இதுவரைக்கும் ரொம்ப ஸ்லோவா
ஒரு அவார்டு படம் மாதிரி கதை நகரும் சார்…
பணம் வாங்கிட்டு ஆபீஸ் போன தயாரிப்பாளர் போனை எடுத்து ‘ஹலோ கார் புரோக்கரா…
அர்ஜெண்டா… ஒரு ஆடிக்கார் ஆபீசுக்கு எடுத்துகிட்டு வாய்யா…
கைமேல காசு வாங்கிட்டு போன்னு’
சொல்லிட்டு சிகரெட்ட எடுத்து பத்த வைச்சி ரோலிங் சேர்ல மல்லாக்க
சாஞ்சிகிட்டு வளைய வளையமா புகை வுடுறாரு சார்…
சொல்லிவிட்டு டேபிள் மீது இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மடக் மடக்கென குடிக்கிறார்.
அதுவரை அசால்ட்டாக கதை கேட்டுக் கொண்டிருந்த தயாரிப்பாளர் சீட் நுனிக்கு வர…

கதை தொடர்கிறது…
ஆபீஸ் கீழ புத்தம் புது ஆடிக்கார்… பளபளன்னு நிக்க…
தயாரிப்பாளருக்கு பசி எடுக்குது…
அந்த ஆடிக்கார்ல ஏறி பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு போறார்…
கூடவே டிஸ்கஷனுக்கு ஒரு கூட்டத்தையும் கூட்டிக்கிறார்…
அங்கபோய் தயிர் சாதம் ஆர்டர் குடுக்க…

தயாரிப்பாளர் குறுக்கிட்டு: யோவ்… தயிர் சாதம் சாப்பிட
எவனாவது பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு போவானாய்யா…
கிறுக்கன் மாதிரி கதை சொல்ற என கடுப்படிக்க…
கதை சொல்ல வந்தவர்: சார்… அங்க தான் சார் ஒரு டிவிஸ்ட் வைக்றோம்…
அரை டவுசர் போட்டுகிட்டு ஆடிக்கார்ல பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு போனாலும்
பழசை மறக்காம தயிர் சாதம் சாப்பிடும் தயாரிப்பாளர்னு ஒரு பாட்டு வைக்கிறோம் சார்…

அந்த பாட்டை மலேசியா, துபாய், சிங்கப்பூர்னு பல நாடுகள்ள போய் ஷூட் பண்றோம் சார்…
தயாரிப்பாளர்: சரி…. அப்புறம்…
கதை சொல்ல வந்தவர்: ஒரு வழியா ஆட்டம் பாட்டம் எல்லாம் முடிஞ்சி
அந்த தயாரிப்பாளர் படத்தோட ஷூட்டிங்கையும் முடிச்சிடுறாரு…
ரிலீஸ் தேதி அறிவிச்சிடுறாரு…
அந்த நேரம்பார்த்து பைனான்சியர் குடுத்த பணத்தை செட்டில் செய்ய கேக்குறாரு….
ரிலீஸ் டேட் நெருங்கிடுச்சி… வாங்குன பணத்தை குடுக்காம
போனா படத்தை ரிலீஸ் செய்ய முடியாதுன்னு
பைனான்சியர் என்ஓசி குடுக்காம ரெட் போட்டுடுறாரு…
அதேநேரம், பலரை இயக்குனரா அறிமுகப்படுத்துன
ஒரு தயாரிப்பாளர் தானும் இயக்குனர்
ஆகிடனும்னு ஒரு படம் தயாரிக்க நம்ம
பைனான்சியர்கிட்ட பணம் வாங்கிட்டு போறாரு…
அவரும் தன் பங்குக்கு ஆட்டம் பாட்டம்… கொண்டாட்டம்…
ஷூட்டிங் டேட்டிங்னு ஒரு வழியா படத்தை
எடுத்து முடிச்சிடுறாரு… அந்த படத்தையும்
ரிலீஸ் பண்ணலாம்னு யோசிக்கும்போது பைனான்சியருக்கு
தரவேண்டிய கட்டுகட்டான கரன்சிங்க கண்ணு முன்னாடி காத்தாடுது…
இரண்டு பேரும் பணத்தை செட்டில் பண்ணாம
ஏதாவது காரணம் சொல்லி டிமிக்கி குடுத்துகிட்டே இருக்காங்க…
பைனான்சியரும் பணம் கேட்டு அன்பா விரட்டிகிட்டேயிருக்காரு…
இந்த இடத்துலதான்…
‘‘வாங்குன பணத்தை
வட்டியோட நீ தாடா தாடா…ன்னு
பைனான்சியரும்
வட்டியும் இல்ல அசலும்
இல்ல முடிஞ்சத நீ
செய் போடா போடா…’’ன்னு பணம் வாங்குனவங்களும்
போட்டி போட்டு எதிர் பாட்டு பாடுற
மாதிரி ஒரு டைட் சாங் வைக்கிறோம் சார்…
இந்த பாட்டுக்கு பின்னணியில பைனான்சியர் பின்னாடி ஒரு கூட்டம்
பணம் வாங்குனவங்க பின்னாடி ஒரு கூட்டம்னு
கலர்புல்லா சாங் எடுக்குறோம் சார்…
உதாரணத்துக்கு சிவாஜிகணேசன்சத்யராஜ்
நடிச்ச ஜல்லிக்கட்டு படத்துல வருமே
ஒரு போட்டி பாட்டு அது மாதிரி சார்…
பாட்டு முடிஞ்சதும் கடுப்பான பைனான்சியர் தயாரிப்பாளரை புடிச்சி இன்னிக்கு
சாயங்காலம் 6 மணிக்குள்ள பணம் வரலன்னா நடக்குறதே வேறன்னு மிரட்டல் விட….
அதுவரைக்கும் ஜாலியா ஆட்டம் பாட்டம்னு போன கதையில ஒரு பிரேக்….
ஷாக் முகத்தோட தயாரிப்பாளர்…
திகில் முகத்தோட இயக்குனர்…
கோபமா பைனான்சியர் முகத்தை
ஸ்கிரீன்ல பெருசா போட்டு பீரீஸ் பண்ணி இடைவேளை விடுறோம் சார்…

போன் ரிங் அடிக்குது சார்… நம்ம பைனானசியர் தான் எடுக்குறாரு…
எதிர் முனையில தயாரிப்பாளர்… ‘‘அண்ணே… கோச்சிக்காதீங்க… உங்க பணத்தை
குடுக்காம படத்தை ரிலீஸ் செய்ய முடியாதுன்னு எனக்கு தெரியாதா என்ன…
எனக்கு வரவேண்டிய பணம் லேட் ஆகுது… ரிலீஸ் டேட் வேற நெருங்கிடுச்சி…
உங்களுக்கு ஆட்சேபம் இல்லீனா… இயக்குனர்
அவதாரம் எடுக்குற தயாரிப்பாளரு எனக்கு பணம் தரவேண்டியிருக்கு…
அந்த பணத்தை அப்படியே உங்களுக்கு தரச் சொல்லிடுறேன்… ஏன் பாருங்க…
அவரு எனக்கு அனுப்பி அதை நான் உங்களுக்கு அனுப்பிவிடுறதை விட பேசாம
அவரையே உங்க அக்கவுண்டுக்கு அனுப்பிடச் சொல்றேன்.
மறக்காம அந்த என்ஓசிய மட்டும் பையன்கிட்ட குடுத்தனுப்பிடுங்கன்னா’ன்னு
சொல்ல போன் கட் ஆகுது…
பைனான்சியருக்கு யார் பணம் குடுத்தா என்ன நமக்கு வரவேண்டிய
பணம் வந்து சேர்ந்தா போதும்னு யோசிக்கும்போதே அறை கதவு தட்டப்படுகிறது…
உள்ளே வரும் நபர் இப்போது போனில் பேசிய தயாரிப்பாளரின் அலுவல ஆள்…
அவரைப் பார்த்து பைனான்சியர் ‘கொஞ்சம் இருப்பா…
பணம் டிரான்ஸ்பர் ஆகட்டும்… என்ஓசி வாங்கிட்டு போயிடு…’ன்னு சொல்லிட்டு
அவர் வேலையை பார்க்க போய்விடுகிறார்.
வங்கியில் இருந்து குறுந்தகவல் திறந்து பார்த்தால் பைனான்சியருக்கு தயாரிப்பாளர்
தரவேண்டிய பணம் இயக்குனர் அக்கவுண்ட்டில் இருந்து டிரான்ஸ்பர் ஆகியிருந்தது.
என்ஓசியும் கை மாறி அந்த தயாரிப்பாளரின் படமும் ரிலீஸ் ஆகி ஓடி பெட்டிக்கு திரும்புகிறது…
இயக்குனராக மாறிய தயாரிப்பாளர் திடீர்னு என்ன ஏதுன்னே சொல்லாம
படத்தை ரிலீஸ் பண்ண விடாம பைனான்சியர் தடை பண்றாரு… அவருக்கு குடுக்க
வேண்டிய எல்லா பணத்தையும் செட்டில் பண்ணிட்ட பிறகும்
பைனான்சியர் என்ஓசி குடுக்காம ஏமாத்துறாருன்னு புகார் குடுக்குறாரு…
பைனான்சியருக்கு பயங்கர ஷாக்…
இந்த இயக்குனரு எங்கடா பணத்தை குடுத்தான்னு ஆள் விட்டு கேட்டா….
ஏற்கனவே பைனான்சியர் அக்கவுண்ட்டுக்கு தன்னோட கம்பெனி அக்கவுண்ட்லயிருந்து
டிரான்ஸ்பர் பண்ண பணத்தோட டிரான்ஸ்பர் ரசீதை தூக்கிப்போடுறாரு…
இங்க அந்த இயக்குனருக்கு ஒரு டைட் குளோஸ் வைக்குறோம்…
பைனான்சியர் ஷாக் ஆகியிருக்குறதால அவருக்கும் ஒரு டைட் குளோஸ் வைக்கிறோம்…
அந்த ஷாக்லயே பைனான்சியர் கை போன்ல இருக்கும் தயாரிப்பாளருக்கு லைன் போடுது…
அதனால அந்த தயாரிப்பாளருக்கும் ஒரு டைட் குளோஸ் வைக்கிறோம்…
எதிர் முனையில எடுத்தவர் ‘அண்ணே… நம்ம பணம்தான் இயக்குனர் கம்பெனி
அக்கவுண்ட்ல இருந்து உங்களுக்கு டிரான்ஸ்பர் ஆகிடுச்சேன்னு’
சொல்லிட்டு அடுத்து பேசுவதற்குள் லைன் கட் ஆகிறது….
பைனான்சியர் டேபிளில் இயக்குனர் தான் தரவேண்டிய பணத்துக்குதான்
அந்த டிரான்ஸ்பர் பண்ணதாக கொடுத்த ரசீது பேன் காற்றில் படபடக்கிறது…
அதுவரைக்கும் அந்த ரூம்ல கரண்ட் போனதே கதை கேட்ட தயாரிப்பாளருக்கும் தெரியல…
கதை சொல்லிகிட்டிருந்த இயக்குனருக்கும் தெரியல…
அப்ப பாத்து திடீர்னு கரண்ட் வரவும்… டிவி ஆன் ஆகுது…
காமெடி சேனல்ல
‘அடேய்… ராசா… இங்க வா… நான் ஒன்ன
என்ன வாங்கிட்டு வரச் சொன்னேன்….’’
‘‘வாழப்பழம்னே…’’
‘‘எத்தன…’’
‘‘இரண்டு’’
‘‘கடக்காரன்கிட்ட கேட்டியா… பழம் குடுத்தானா…’’
‘‘குடுத்தான்னே…’’
‘ஒண்ணு இந்தாருக்கு… இன்னொன்னு எங்க…’’
‘‘அதான்னே இது…’’ என்று கவுண்டமணியும் செந்திலும் நடித்த கரகாட்டக்காரன் காமெடி ஓட…

தயாரிப்பாளர் ரிமோட்டை எடுத்து டிவியை ஆப் செய்யப்போகிறார்…
கதை சொன்ன இயக்குனர் குறுக்கிட்டு… ‘சார்… நம்ம கதையோட கிளைமாக்ஸ்சே
இதுதான் சார்… ஆப் பண்ணாதீங்க…’
கதை கேட்ட தயாரிப்பாளர் ஷாக் ஆகிறார்.
தயாரிப்பாளர் : சரிப்பா… இதுக்கு பட்ஜெட் எவ்வளவு….
இயக்குனர்: எப்படியும் ஒரு 180 நாள் ஷூட்டிங் போகும்…
சாங் வேற 3 கன்ட்ரில எடுக்கப்போறோம்… சிஜி ஒர்க் வேற இருக்கும்…
எப்படியும் 11 கோடிக்குள்ள பர்ஸ்ட் காப்பி முடிச்சிடலாம் சார்…
இயக்குனர் அப்படி சொல்லி முடித்ததும்
அறிமுக படத்துக்கே 11 கோடி கேக்குற இயக்குனரான்னு
நெஞ்சை புடிச்சிகிட்டு சீட்ல சாய…

இயக்குனர் வாய்ஸ்:
இப்படித்தான் சொல்ல வந்த கதையை விட்டு விட்டு பிரமாண்டத்துக்கும், பகட்டான
விளம்பரத்துக்கும் பைனான்சியரிடம் பணத்தை வாங்கி செலவு செய்யும்
தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பட ரிலீஸ் நேரத்தில் சிக்கலில் மாட்டிக் கொண்டு
இந்த சினிமா தொழிலே மோசம் என்று பழி போடுகிறார்கள்.
கதை வைத்திருக்கிற நல்ல இயக்குனர்களுக்கு
வாய்ப்பு தராத தயாரிப்பாளர்களும் பேர் பெற்ற இயக்குனர்களை நம்பி
பணத்தை வாங்கி செலவு செய்து விட்டு
திருப்பி தரமுடியாமல் தொழிலை விட்டே மறைந்து போகிறார்கள்.
இன்னும் சிலபேர் தற்கொலை செய்து கொண்டு
வாழ்க்கையையும் முடித்துக் கொள்கிறார்கள்.
சினிமா எனும் அற்புத கலையை அழகாக கைக்கு
அடங்கும் காசுக்குள் படமாக்கி உலக அரங்கில்
தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்த அனைவரும்
கைகோர்ப்போம்…
மீண்டும் ஒரு சினிமா கதையோடு உங்களை சந்திக்கும்
உங்கள் கோடங்கி
