வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்டு வரும் இடா சூறாவளி, தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வட கிழக்கு அமெரிக்காவில் கனமழைக்கு 2 வயது சிறுவன் உட்பட 42 பேர் இதுவரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தெற்கு மாகாணமான லூசியானாவில் இடா சூறாவளி காரணமாக பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல நகரங்களின் வீதிகளில் வெள்ளம் ஓடுகிறது. லூயிசியானா, மிஸ்ஸிசிப்பியில் சூறாவளி இடா ஏற்படுத்திய தாக்கத்தின் தீவிரத்தை செயற்கைக்கோள் படங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ஐந்தாவது சக்தி வாய்ந்த சூறாவளியாக இடா கருதப்படுகிறது.

சூறாவளி பாதிப்பு காரணமாக கடலோர மாவட்டங்கள், ஜீன் லேஃபிட், லெயர் லேஃபிட் உள்ளிட்ட சிறிய நகரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் சுரங்கப்பாதைக்குள் கனமழை கொட்டும் காட்சியும், அதற்கு மத்தியிலும் இயக்கப்பட்ட கடைசி ரெயில் சேவை வந்து போகும் காணொளியை உள்ளூர் மக்கள் பகிர்ந்துள்ளனர்.

இந்நிலையில், நியூயார்க் நகரின் ப்ரூக்ளின் மற்றும் குயின்ஸ் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சுரங்கப் பகுதிகளிலும் வெளியிடங்களிலும் மக்கள் சிக்கியிருக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணிகளை உள்ளூர் நிர்வாகங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

தற்போது நியூயார்க் நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நகர மேயர் பில் டி பிளாசியோ, வரலாறு காணாத வானிலையை நியூயார்க் அனுபவித்து வருகிறது. கொடூரமான வகையில் ஓடும் வெள்ளத்தால் நகர சாலைகள் படுபயங்கர நிலையில் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

நியூ ஜெர்சியிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழை, வெள்ளம் காரணமாக நியூயார்க் நகர சுரங்க ரெயில் சேவைகள் அனைத்தும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

257 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன