வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

கொடநாடு வழக்கு மறுவிசாரணை- தற்கொலை செய்து கொண்ட கணினி ஊழியரின் தந்தையிடம் விசாரணை!

கொடநாடு வழக்கு மறுவிசாரணை- தற்கொலை செய்து கொண்ட கணினி ஊழியரின் தந்தையிடம் விசாரணை!

கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் பல்வேறு மர்மங்கள் இருப்பதால் அந்த வழக்கை நீலகிரி போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 5 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

முக்கிய குற்றவாளியான சயான், சாட்சிகள் மற்றும் கொடநாடு மேலாளர் என 40-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் மறுவிசாரணை நடத்தி அவற்றை வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.

சம்பவம் நடந்த 3 மாதங்களில் கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்த தினேஷ்குமார், தூக்கில் பிணமாக தொங்கினார். கொடநாடு எஸ்டேட்டின் வரவு- செலவு கணக்குகளை கண்காணித்து வந்த அவர் திடீரென இறந்ததில் மர்மம் உள்ளதாக அவரது உறவினர்கள் அப்போது புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாரித்த போலீசார் கண்பார்வை மங்கியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்து வழக்கை முடித்தனர்.
இந்தநிலையில் கொடநாடு வழக்கு மறுவிசாரணை நடைபெறுவதால் தினேஷ்குமார் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து தினேஷ்குமார் வழக்கையும் மீண்டும் விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி கோத்தகிரி தாசில்தாரை சந்தித்த தனிப்படை போலீசார் தினேஷ்குமார் மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணை மேற்கொள்வது தொடர்பாக மனு ஒன்றை அளித்தனர். அதற்கு உடனடியாக அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தினேஷ்குமார் வழக்கை நேற்றே போலீசார் விசாரிக்க தொடங்கினர். தினேஷ்குமாரின் சொந்த ஊரான கோத்தகிரி அருகே கெங்கரைக்கு நேற்று மாலை டி.எஸ்.பி. தலைமையிலான தனிப்படை போலீசார் 5 பேர் சென்றனர். அவர்கள் கெங்கரையில் வசிக்கும் தினேஷ்குமாரின் தந்தை போஜனை தனியாக அழைத்து விசாரித்தனர்.

தினேஷ்குமார் எப்படி இறந்தார், அவரது மரணத்தில் என்னென்ன சந்தேகங்கள் உள்ளன, நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். சுமார் 2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பல முக்கிய தகவல்களை போஜன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர்.

போஜனை தொடர்ந்து அவரது உறவினர்கள் சிலரிடமும், அவருடன் பணியாற்றிய எஸ்டேட் ஊழியர்களிடமும் போலீசார் விசாரிக்க உள்ளனர். விசாரணைக்கு பின் தினேஷ்குமாரின் தற்கொலை வழக்கு சந்தேக மரண வழக்காக மாற்றப்படும் என தெரிகிறது. தேவைப்பட்டால் தினேஷ்குமாரின் உடலை மீண்டும் மறுபிரேத பரிசோதனை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கொடநாடு வழக்கில் ஒவ்வொரு நாளும் புது புது தகவல்கள் வெளியாகி வருவதால் பரபரப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
125 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன